தோக்கியோ: கடல் வெப்பத்தால் ஜப்பானின் உயிரினங்களில் சில ஒட்டுமொத்தமாக அழிகின்றன.
மேற்கு ஜப்பானில் உள்ள கடற்கரையோரங்களில் வளர்க்கப்படும் குறிப்பாக ஆய்ஸ்டர்ஸ் வகை சிப்பிகள் 90 விழுக்காடு அழிந்துவிட்டதாக அதிகாரிகள் திங்கட்கிழமை (டிசம்பர் 1) தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் வளர்க்கப்படும் நான்கில் மூன்று பங்கு ஆய்ஸ்டர்ஸ்கள் சேத்தோ தீவைச் சுற்றி உள்ளன. அங்குதான் அவ்வகை சிப்பிகள் அதிகமாக இறந்துபோயுள்ளன.
தமது வாழ்நாளில் இதுபோன்று கண்டதில்லை என்று 20 ஆண்டுகளாகச் சிப்பி வளர்ப்புப் பண்ணையை நிர்வகிக்கும் திரு தத்சுயா மொரியோ கூறினார்.
ஹிரோஷிமா வட்டாரத்தில் பணியாற்றும் அதிகாரியான திரு சொய்ச்சி யோகவுச்சி வேறு சில பிரச்சினைகள் இருந்தாலும் கடல் வெப்பமே அதற்கான முக்கியக் காரணம் என்று தெரிவித்தார். ஹிரோஷிமா சேத்தோ தீவின் எல்லையில் உள்ளது.
இவ்வாண்டு வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவுகள், ஜூலை முதல் அக்டோபர் வரை ஹிரோஷிமா கடற்கரைப் பகுதியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசிலிருந்து 1.9 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது என்று கணித்துள்ளது. அது 1991 முதல் 2020 வரையிலான சராசரி அளவைவிட அதிகமாகும்.
கடல் வெப்பநிலை அதிகரித்து வாரக்கணக்கில் தொடரும்போது சிப்பிகள் பலவித கிருமிகளால் தாக்கப்படுகின்றன என்று கடல்சார்ந்த பொருள்கள் பிரிவின் தலைவரான திரு யோகவுச்சி விளக்கினார். ஜப்பானின் விவசாயம், வனம், மீனவளத்துறைக்கான பிரிவு இதனை உள்ளூர் அரசாங்க அதிகாரிகளுடன் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
கடல் தொழில்நுட்ப ஆய்வுக்கான அதிகாரி திரு சினிசிரோ டொய், குறைந்த அளவு மழையும் வெப்பமும் மேற்குக் கடலில் உப்பு அதிகரிக்க காரணமாகி சிப்பிகளை அழித்துள்ளன என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பானின் சிப்பிகளை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஹாங்காங், வியட்னாம், தைவான், தாய்லாந்து ஆகியவற்றுடன் சிங்கப்பூரும் அடங்கும்.
உலகமெங்கும் கடலின் வெப்பநிலை அதிகரித்துவருவது மிகவும் ஆபத்தானது என்பதை இது உறுதிசெய்கிறது.

