கோலாலம்பூர்: மாயமான எம்எச்370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் பணிகள் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி தொடர உள்ளன.
இத்தகவலை மலேசியப் போக்குவரத்து அமைச்சு புதன்கிழமையன்று (டிசம்பர் 3) வெளியிட்டது.
2014ஆம் ஆண்டில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்றுகொண்டிருந்த எம்எச்370 விமானம் மாயமானது.
அப்போது அந்த விமானத்தில் 227 பயணிகளும் 12 சிப்பந்திகளும் இருந்தனர்.
ஆக அண்மையில் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் தேடுதல் பணிகள் நடைபெற்றன.
ஆனால், மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இம்முறை கடலுக்கு அடியில் நடத்தப்படும் தேடுதல் பணிகள் 55 நாள்களுக்கு நடைபெறும் என்றும் அது விட்டுவிட்டு நடத்தப்படும் என்றும் மலேசியப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

