சிப்பாங் எஃப்1 பந்தயம் மலேசியப் பொருளியலில் $298 மி. சேர்த்துள்ளது: நாடாளுமன்றம்

சிப்பாங் எஃப்1 பந்தயம் மலேசியப் பொருளியலில் $298 மி. சேர்த்துள்ளது: நாடாளுமன்றம்

படம்: ராய்ட்டர்ஸ்

14 Oct 2026 - 5:47 pm

1 mins read

கோலாலம்பூர்: இந்த மாதத் தொடக்கத்தில் சிப்பாங்கில் நடைபெற்ற ஃபார்முலா 1 கிராண்ட்பிரீ கார் பந்தயத்தின் மூலம் மலேசியப் பொருளியலில் கிட்டத்தட்ட 950 மில்லியன் ரிங்கிட் ($298 மில்லியன்) சேர்க்கப்பட்டுள்ளதாக மலேசிய இளையர், விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதிமுதல் 4ஆம் தேதிவரை நடைபெற்ற அந்த மூன்று நாள் நிகழ்வில், பந்தய நாளன்று மட்டும் வருகை தந்த கிட்டத்தட்ட 103,000 பார்வையாளர்கள் உட்பட, வார இறுதி முழுவதும் மொத்தம் 261,000 பேர் கலந்துகொண்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

ஃபார்முலா 1 நிர்வாகம் அளித்த தகவல்களின்படி, அந்த உலகத் தரம் வாய்ந்த நிகழ்வு கிட்டத்தட்ட 950 மில்லியன் ரிங்கிட் அளவுக்குப் பொருளியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதோடு, உலகம் முழுவதும் நேரலை செய்யப்பட்ட அந்தப் போட்டியை உலகளவில் 827 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மலேசியாவில் அந்தப் பந்தயத்தை முன்னிட்டு 97,000க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகள் விற்பனையாயின.

“அத்துடன் 50,000க்கும் மேற்பட்ட அனைத்துலகச் சுற்றுப்பயணிகளும் ஏறக்குறைய 5,000 வெளிநாட்டு ஊழியர்களும் மலேசியாவிற்கு வருகை தந்தனர்,” என்று அக்டோபர் 13ஆம் தேதி அளிக்கப்பட்ட எழுத்துபூர்வ நாடாளுமன்ற பதிலில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஎஃப்1பொருளியல்