கோலாலம்பூர்: பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தில் பதின்ம வயதினர் நால்வரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
அவர்களில் மூவர் கெடா மாநிலத்தின் பாலிங் நகரில் உள்ள பள்ளியொன்றின் மாணவர்கள். மற்றவர் அதே பள்ளியின் முன்னாள் மாணவர் என்று ஆஸ்ட்ரோ அவானி ஒளிவழி தெரிவித்தது.
சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டுச் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) காவல்துறையில் புகார் அளித்ததாக வட்டாரக் காவல்துறையின் தற்காலிகத் தலைவர் அஹ்மட் சலிமி மாட் அலி கூறினார்.
மாணவி நிர்வாணமாக இருக்கும் காணொளி இணையத்தில் பரவுவதாக ஒழுக்கவியல் ஆசிரியர் ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரின் தந்தை காவல்துறையை நாடினார்.
காவல்துறை புலனாய்வை மேற்கொண்டு நால்வரை ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்குக் கைது செய்ததாகக் காவல்துறையின் தற்காலிகத் தலைவர் கூறினார்.
பள்ளி வளாகத்திற்குள் பல இடங்களில் மே மாதத்திற்கும் ஆகஸ்ட்டுக்கும் இடையில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் சந்தேக நபர்கள் ஈடுபட்டது முதற்கட்டப் புலனாய்வில் தெரியவந்ததாக அவர் சொன்னார்.
நால்வரும் ஐந்து நாளுக்குத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆறு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
கூட்டாகப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது, வயது குறைந்த ஒருவரின் ஆபாசப் படங்களை விநியோகித்தது முதலியவற்றின் தொடர்பில் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
அலோர் காஜாவில் மாணவி ஒருவரை மாணவர்கள் நால்வர் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வேளையில் அண்மைச் சம்பவம் நடந்துள்ளது.