அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம்

2 mins read
6bfee697-6162-4f86-952d-63469bb96092
பள்ளியின் பொறியியல் பிரிவில் துப்பாக்கிக்காரன் நடமாடுவதாக தகவல் பகிரப்பட்டவுடன், பிரவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்புகளில் இருக்கும்படி சனிக்கிழமை (டிசம்பர் 13) மதியம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. - படம்: டோனி லுவோங் / நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க்: அமெரிக்காவில் ரோட்ஸ் தீவில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 13) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

பிரசித்தி பெற்ற ஐவி லீக் பள்ளி இயங்கும் அந்த வளாகத்தில், இதுவரை இரண்டு பேர் மரணமடைந்துள்ளதாகவும் ஒன்பதுபேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தீவின் தலைநகரான புரோவிடன்ஸ் மேயர் பிரெட் ஸ்மைலி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிக்காரன் இன்னும் பிடிபடவில்லை, அவன் காவல்துறையால் தேடப்பட்டுவருகிறான் எனவும் அறியப்படுகிறது. அனைத்து மாணவர்களும் வகுப்புகளில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என நகர மேயர் கூறியுள்ளார்.

கருப்புநிற ஆடை அணிந்துள்ள ஆடவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிவிட்டதாகக் காவல்துறை துணைத் தலைவர் டிமத்தி ஒஹாரா செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

பள்ளியில் உள்ள பொறியியல் பிரிவுக்குள் ஆடவர் எப்படி உள்ளே சென்றார் என்பது தெரியவில்லை எனவும் திரு டிமத்தி கூறினார். துப்பாக்கிக்காரன் பற்றிய விவரங்களும் அவன் பயன்படுத்திய ஆயுதத்தின் வகையும் இன்னும் அறியப்படவில்லை என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

அவனைத் தேடும் பணியில் காணொளிகள் தற்போது பயன்பட்டுவருவதாக அவர்கள் விவரித்தனர். சுமார் 11,000 மாணவர்கள் பயிலும் பள்ளிக்கென செயல்படும் காவல்துறைத் தலைவர் ரொட்னி சாட்மன் நிலைமை பல மாற்றங்களுக்கு தொடர்ந்து உட்பட்டுள்ளதாகக் கூறினார்.

பள்ளி தற்போது செயலிழந்துள்ளது. பள்ளியின் பொறியியல் பிரிவில் துப்பாக்கிக்காரன் நடமாடுவதாக பிற்பகல் 4.15மணிக்குத் தகவல் பகிரப்பட்டவுடன், பிரவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்புகளில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைப்பேசிகளின் இணைப்பை துண்டிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பனிக்காலம் துவங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், இலையுதிர்காலத்தின் இறுதித் தேர்வுகள் நடந்துவரும் இரண்டாம் நாளில் சம்பவம் நடந்துள்ளாக ஏபிசி ஊடகம் கூறியுள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் மரண எண்ணிக்கையும் காயமடைந்தோர் பற்றியும் உறுதிசெய்யப்படாதத் தகவல்களை வெளியிட்டுவருகின்றன. சில ஊடகங்கள் 20பேர் வரையில் காயமுற்றதாக செய்தி வெளியிட்டுள்ளன.

புரோவிடன்ஸ் நகர பொதுப் பாதுகாப்புத் தகவல் பிரிவின் தலைவர் கிரிஸ்டி டொஸ்ரெயிஸ், மரணமடைந்தோர் மற்றும் காயமுற்றோர் விவரங்களை வழங்க மறுத்துவிட்டார். விசாரணை தொடர்வதாகவும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் மறைந்து இருக்கவேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டார்.

துப்பாக்கிக்காரன் பள்ளியிலிருந்து வெளியேறிய ஹோப் சாலையருகே பொதுமக்களை செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுருத்தியுள்ளனர். அங்கு பல மருத்துவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது சமூக ஊடகப் பதிவில் அவருக்கு விவரங்கள் விளக்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு அமைப்பு (எஃப்பிஐ) அங்கு விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்