உலகப் பொருளியல் நிலவரம் சவால்மிக்கதாக இருப்பினும் சிங்கப்பூர் தனது தொழில்துறையை தொடர்ந்து மேம்படுத்தும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எரிசக்தி மற்றும் ரசாயனத் துறையை மதிப்புமிக்க ஒன்றாக, கரிமத்தைக் குறைவாகப் பயன்படுத்தும் துறையாக மாற்றுவதில் சிங்கப்பூர் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றார் அவர்.
“இந்த இலக்குகளை அடைய, தொழில்துறைத் தலைவர்களுடன் இணைந்து அரசாங்கம் பணியாற்றும்.
“திறன்மிக்க ஊழியரணி, உயர்தர உள்கட்டமைப்பு, தொழில் நடத்துவதற்கான சூழல், உலகளாவிய எரிசக்தித் துறையுடனான ஒருங்கிணைப்பு போன்ற போட்டித்தன்மையுடன் விளங்கக்கூடிய துறைகளில் அரசாங்கம் முதலீடு செய்யும்,” என்றார் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான்.
அமெரிக்க எரிசக்திப் பெருநிறுவனமான எக்சான்மோபிலின் மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு துணைப் பிரதமர் உரையாற்றினார்.
சிங்கப்பூரின் எரிசக்தி, ரசாயனத் துறையில் மிகவும் குறிப்பிடத்தக்க பங்காளிகளில் ஒன்று எக்சான்மோபில் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலவரப்படி, எக்சான்மோபிலின் புதிய தொழிற்சாலை மட்டும்தான் தரமிக்க, புதிய ‘இஹெச்சி 340 மேக்ஸ்’ மசகு எண்ணெய்யைத் தயாரித்து அதனை ஆசியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கிறது.
“இது எக்சான்மோபிலின் புதிய சிங்கப்பூர் தொழிற்சாலையின் தொடக்கம் மட்டுமல்ல, சிங்கப்பூருக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையிலான நீண்டகால நட்பின் முக்கிய மைல்கல்லாகவும் விளங்குகிறது,” என்றார் திரு கான்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் அவர், “நமது எரிசக்தி மற்றும் ரசாயனத் துறையின் வளர்ச்சியை வடிவமைக்கும் ஆற்றல் வாய்ந்தது அந்தப் பங்காளித்துவம்,” என்று தெரிவித்தார்.
எரிசக்தி மற்றும் ரசாயனத் துறை சிங்கப்பூர் உற்பத்தித் துறையின் அடித்தளத் தூண்களில் ஒன்று. சிங்கப்பூரின் மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ கால்பங்கு அந்தத் துறையைச் சார்ந்தது.
அத்துடன், கடல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து நடுவமாக சிங்கப்பூர் திகழ்வதற்கும் அது உதவிபுரிகிறது. மேலும், உலக எரிபொருள் மற்றும் ரசாயனத் துறை விநியோகத் தொடருக்குள் சிங்கப்பூரை நிலைநிறுத்துவதும் அந்தத் துறைதான்.
1960களில் சிங்கப்பூரில் காலடி எடுத்து வைத்த எக்சான்மோபில், தற்போது ஜூரோங் தீவில் ஓர் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல் வளாகமாகத் திகழ்கிறது. தற்போதைய நிலவரப்படி, நிலையான சொத்துகளில் $30 பில்லியனுக்கு மேல் அது முதலீடு செய்துள்ளது.

