வரி செலுத்தாத சிங்கப்பூர் தொழிலதிபர் தாய்லாந்தில் கைது

1 mins read
e58b1da6-01b1-4fc8-b298-b02e8a5ed297
சிங்கப்பூரரான டேவி லியு நாடு திரும்ப விமானம் ஏறிவிருந்தபோது கைதுசெய்யப்பட்டார். - படம்: சிஐபிதாய்லாந்து/ஃபேஸ்புக்

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பவிருந்த சிங்கப்பூர்த் தொழிலதிபரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

அவர் 5.2 மில்லியன் பாட் ($205,000) தொகைக்கும் அதிகமான வரியைச் செலுத்தவில்லை என்று நம்பப்படுகிறது.

அந்த ஆடவர் டேவிட் லியூ, 71, என்றும் இசென்‌ஷியா மோனிட்டரிங் சேவைகள் (தாய்லந்து) ஊடக நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் என்றும் தாய்லாந்துக் காவல்துறையின் பொருளியல் குற்றவியல் தடுப்புப் பிரிவு அடையாளம் கண்டது.

ஜூன் 2ஆம் தேதி சிங்கப்பூருக்குத் திரும்புவதற்கான விமான நிலையத்தில் லியூ இருந்தபோது பேங்காக்கில் அவர் கைதானதை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இசென்‌ஷியா நிறுவனத்துக்குச் செலுத்தவேண்டிய வரித் தொகையைக் கட்டாமல் லியூ ஏமாற்ற முயன்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டார்.

2015, ஜூலையிலிருந்து அக்டோபர் வரை சிங்கப்பூரரான லியூ ஊடக நிறுவனத்தின் அதிகாரபூர்வ இயக்குநராக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இசென்‌ஷியாவின் வருடாந்தர அறிக்கைப்படி, சிட்னியில் தலைமையகம் கொண்டுள்ள ஊடக மதிநுட்ப நிறுவனத்தின் ஆசிய தலைமை நிர்வாகியாக 2015 ஜூன் 1ஆம் தேதி லியூ நியமிக்கப்பட்டார்.

இசென்‌ஷியாவிலிருந்து 2019ஆம் ஆண்டு வெளியேறிய அவர், தற்போது தரவு மதிநுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பு வகிக்கிறார்.

அவர் வரி செலுத்தாமல் அரசாங்கத்துக்கு 5.24 மில்லியன் பாட் இழப்பு ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், லியூக்கு 200,000 பாட் வரையிலான அபராதம் அல்லது ஏழாண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்