புதுக்கோட்டை: தனது திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு வந்திருந்த தன் முதலாளியைக் குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, தடபுடல் வரவேற்பு அளித்து அசத்தியுள்ளார் ஆடவர் ஒருவர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 17 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், சொந்த ஊரில் அவருக்குத் திருமணத்திற்கு ஏற்பாடாகி இருந்தது. இதனையடுத்து, இந்தியாவிற்கு வந்து அந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும் என்று தன் முதலாளி கேல்வின் இயோவிற்கு திரு மாரிமுத்து அழைப்பு விடுத்தார்.
அதனைத் திரு கேல்வினும் ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, அண்மையில் புதுக்கோட்டை சென்றிருந்த திரு கேல்வினை மாலையிட்டு வரவேற்று, செண்டை மேளம் முழங்க, உறவினர்களும் நண்பர்களும் புடைசூழ, இரட்டைக் குதிரை பூட்டிய வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார் திரு மாரிமுத்து.
பின்னர் அவரின் உறவினர் ஒருவர் திரு கேல்வினுக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.
இப்பயணத்தின்போது, திருக்கட்டளையில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும் சென்றிருந்தார் திரு கேல்வின். அங்கு மாணவர்களோடு சேர்ந்து மரக்கன்றுகளை நட்ட அவர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
அத்துடன், அப்பள்ளியின் மேம்பாட்டிற்காக 50,000 ரூபாய் நன்கொடை வழங்கினார்.
ஒட்டுமொத்தத்தில், திரு கேல்வினின் வருகை திருக்கட்டளைவாசிகள் மறக்க முடியாத வகையில் அமைந்தது என்றால் அது மிகையாகாது.
நன்றி: புதிய தலைமுறை

