பாரிஸ்: பிரான்ஸ் நாட்டிற்கான தென்னாப்பிரிக்கத் தூதர் பாரிஸ் நகரிலுள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் மாண்டு கிடந்த நிலையில் காணப்பட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்துக் கருத்துரைக்க பாரிஸ் காவல்துறை மறுத்துவிட்டது என்றும் தென்னாப்பிரிக்கத் தூதரகத்திற்கான தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலில்லை என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அதுபற்றி ஹோட்டல் நிர்வாகமும் கருத்துரைக்காது என்று அதன் வரவேற்பாளர் கூறிவிட்டார்.
தூதர் எங்கோசினத்தி இம்மானுவல் ‘நத்தி’ எம்தெத்வா கடந்த 2014 முதல் 2019 வரை தென்னாப்பிரிக்காவின் கலை, பண்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார் என்றும் பின்னர் 2019 முதல் 2023 வரை விளையாட்டுத் துறையையும் கவனித்துக்கொண்டார் என்றும் பிரான்சிற்கான தென்னாப்பிரிக்கத் தூதரக இணையத்தளம் தெரிவிக்கிறது.
தூதரைக் காணவில்லை என்றும் அவரின் துணைவியார் புகாரளித்தார் என்றும் அதற்குமுன் தம் கணவர் அனுப்பிய குறுஞ்செய்தி தம்மைக் கவலையில் ஆழ்த்தியதாக அவர் கூறினார் என்றும் ‘லு பாரிசியன்’ ஊடகம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) செய்தி வெளியிட்டது.
இதனிடையே, தூதர் நத்தி எம்தெத்திவா தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல் குறித்து அறிந்துள்ளோம் என்றும் அதிகாரத்துவமாக அதனை உறுதிப்படுத்தியபின் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.