தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

60 ஆண்டுக்குமுன் பாலியல் கொடுமை: நாக்கு துண்டானாலும் வழக்கு மட்டும் வளர்ந்தது

2 mins read
a3b7a200-9864-49f1-b545-40a1a40ec587
திருவாட்டி சோய் மால் -ஜா - படம்: இணையம்

சோல்:  தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையிலிருந்து தப்பிக்க தன்னை தற்காத்துக் கொண்டதற்காகத் தண்டனை பெற்ற மாது ஒருவரை ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமை (செப்டம்பர் 10) தென்கொரிய நீதிமன்றம் அவரை அக்குற்றத்தினின்று விடுவித்துள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த திருவாட்டி சோய் மால் ஜா. கடந்த 1964 ஆம் ஆண்டில் இவருக்கு 19 வயது இருக்கும்போது கிம்ஹே பகுதியைச் சேர்ந்த 21 வயது ஆடவர் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார் திருவாட்டி சோய்.

நீதிமன்றப் பதிவுகளின்படி, ஆடவர் அவரது நாக்கை பலமுறை திருவாட்டி சோயின் வாயில் வலுக்கட்டாயமாகத் திணித்ததாகவும் அவரைத் தரையில் தள்ளி அத்துமீறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் சுவாசிக்க முடியாமல் திணறிய அவர், ஆடவரிடமிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள அந்த நபரின் நாக்கைக் கடித்துத் துப்பியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

திருவாட்டி சோய் கடித்துத் துப்பியதில் கிட்டத்தட்ட 1.5 சென்டிமீட்டர் அளவு நாக்கு துண்டிக்கப்பட்டது.

பாலியல் வன்முறை தொடர்பில் தென்கொரியாவின் சர்ச்சைக்குரிய வழக்காகக் கருதப்பட்ட இவ்வழக்கில்  மாதுவிடம் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் ஆறுமாத சிறைத்தண்டனை மட்டுமே பெற்றார்.  ஆனால் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு அவர்மீது சுமத்தப்படவில்லை.

எனினும் தற்போது 79 வயதாகும்  திருவாட்டி சோய்க்கு  ஆடவருக்கு உடல் ரீதியான கடுந்தீங்கு விளைவித்ததாக நீதிமன்றம்  10 மாத சிறைத்தண்டனை விதித்தது.

இதனால் சோய் சிறையில் அடைக்கப்பட்டார். 10 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின் அவர் மீண்டும் வெளியே வந்தார்.

திருமதி சோய் 2020 இல் மறு விசாரணைக்கு மனு தாக்கல் செய்தார், ஆனால் கீழ் நீதிமன்றங்கள் ஆரம்பத்தில் அவரது மனுவை நிராகரித்துவிட்டன.

இந்தச் சூழலில்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மீ டு மூவ்மென்ட்’ எனும்  இயக்கம் உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 

அப்போது சோய் தனக்கு நேர்ந்த அவலத்தை இந்த இயக்கம் வாயிலாக உலகத்திற்கு தெரியப்படுத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

பல  ஆண்டுப் போராட்டம் மற்றும் மேல்முறையீட்டிற்குப் பிறகு, தென் கொரியாவின் உச்ச நீதிமன்றம் இறுதியாக 2024இல் இந்த மனுவை ஏற்று மறு விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், செப்டம்பர் 10 அன்று அந்நாட்டின் பூசன் மாவட்ட நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்தது.

திருவாட்டி சோய்  மேற்கொண்ட நடவடிக்கைகள் தென்கொரியச் சட்டத்தின்கீழ் ‘நியாயமான தற்காப்பு’ என்றும் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்