கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் கைதுசெய்யப்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் அவரைக் கைதுசெய்யத் திட்டமிடுவதாக நீதிமன்றத்திற்குத் தெரியவந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றபோது அதற்குத் தலைவராக இருந்து வழிநடத்தியவர் ரணதுங்க. பெட்ரோலிய அமைச்சராக இருந்தபோது அவரும் அவரின் சகோதரரும் எண்ணெய் வாங்குவதற்குரிய நீண்டகாலக் குத்தகைகளை வழங்குவதற்கான நடைமுறைகளை மாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், உடனடிக் கொள்முதல்களை அதிக விலைக்கு வாங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அத்தகைய 27 கொள்முதல்களின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 800 மில்லியன் இலங்கை ரூபாய் (S$3.34 மில்லியன்) நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கொள்முதல்கள் 2017ல் நடந்ததாக ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணையம் தெரிவித்தது.
62 வயது ரணதுங்க, தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவரின் சகோதரர் தமிக்க, ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர், சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் முன்னாள் தலைவராக இருந்தவர்.
திங்கட்கிழமை (டிசம்பர் 15) கைதுசெய்யப்பட்ட தமிக்க, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சாட்சிகளைத் திசை திருப்பிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையும் அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் அமெரிக்காவிலும் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள தமிக்கவுக்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு மீண்டும் அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் 13ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

