தமிழ் மக்களின் பேராதரவோடு பெரும்பான்மை பலம் பெற்றார் இலங்கை அதிபர்

2 mins read
ebe68c32-22f6-49a6-a0d4-4eef84884798
தேர்தல் முடிவுகள் தலைநகர் கொழும்பில் அமைக்கப்பட்டு இருந்த பெரிய திரைகளில் காண்பிக்கப்பட்டன. - படம்: இபிஏ

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டு உள்ள நிலையில் அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை (நவம்பர் 14) தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முக்கால்வாசி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மூன்றில் இருபங்குப் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 123 இடங்களை அதிபரின் கட்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடர்வதால் மேலும் சில இடங்களில் அந்தக் கட்சி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி என்பது பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டணி.

அந்தக் கூட்டணிக்கு 62 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் கிடைத்ததாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் தெரிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவடையும்போது அந்த விகிதத்தில் மாற்றம் இருக்கும்.

குறிப்பாக, அதிபர் திசாநாயக்கவுக்குத் தமிழ் மக்களின் பேராதரவு கிட்டி உள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணத் தலைநகரான யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பான்மை இடங்களில் தேசிய மக்கள் சக்திக் கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

1948ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஆளும் கட்சிக்கு தமிழர்கள் அதிக ஆதரவு அளித்திருப்பது இதுவே முதல்முறை.

எதிர்த்தரப்பில் களம் இறங்கிய சஜித் பிரேமதாசவின் கட்சி 18 விழுக்காட்டு மக்களின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது.

வலதுசாரி கம்யூனிச ஆதரவாளரான திரு திசாநாயக்க செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார். அப்போது நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்கு மூன்று இடங்கள் மட்டுமே இருந்தன.

அதிபராக எந்த ஒரு மக்கள் திட்டத்தையும் வெற்றிகரமாகச் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மை பெற வேண்டியது அவசியம். அதனை நோக்கமாகக் கொண்டு, அதிபர் பொறுப்பை ஏற்றதும் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

முடிவுகள் வெளிவந்துகொண்டு இருக்கும் நிலையில், திரு திசாநாயக்க பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டாலும் நாட்டின் பொருளியல் சரிவைச் சீராக்கி மேம்படுத்த வேண்டிய பெரும் சவாலை அவர் எதிர்நோக்குகிறார்.

குறிப்புச் சொற்கள்