ஆதரவின்றி தெருக்களில் வாழ்ந்து வந்த ஒருவர், இறந்த பிறகு தான் சேர்த்து வைத்திருந்த பணம் அனைத்தையும் கோவிலுக்கு விட்டுச் சென்றுள்ளார்.
தாய்லாந்தின் பான் மி பகுதிக்குச் செல்வோர், அங்குள்ள தெருக்களில் டா டொய் பிச்சையெடுப்பதை அடிக்கடி பார்த்திருப்பர்.
குப்பைகளையும் வேண்டாத பொருட்களையும் சேகரிப்பது இவர் வேலையாக இருந்தது.
இவர் வாழ்ந்து வந்த வறுமை சூழ்நிலையிலும் தன் கைக்கு வந்து சேர்ந்த நாணயங்களைச் சிறுகச் சிறுகச் சேர்த்து வந்தார்.
தனக்குப் பிறகு தன்னுடைய சேமிப்புப் பணம் அப்பகுதியிலுள்ள புத்த கோவிலுக்குப் போய் சேர வேண்டும் என்பதை டொய் தன் இறுதி ஆசையாகக் கொண்டிருந்தார்.
அவர் விரும்பியபடியே அவரின் இறப்புக்குப் பிறகு அவரிடம் இருந்த பணத்தைக் கோவில் துறவிகள் ஏற்றுக்கொண்டனர்.
பணத்தை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் 700,000 பாட் (S$3,153) இருந்தது.
கடந்த மாதம் 25ஆம் தேதியன்று ஃபேஸ்புக்கில் டொயின் நற்செயல் குறித்து கியட்டிசாக் சவ்தி என்பவர் பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து தாய்லாந்து இணையவாசிகள் பலர், டொயின் நல்லுள்ளத்தைப் பாராட்டி வருகின்றனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity