தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பினாங்கு: தைப்பூச வழிபாடுகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை; வீடுகளிலிருந்தே வழிபட அறிவுறுத்தல்

2 mins read
6090bca2-f531-4880-a28f-9545d121f213
பினாங்கு தைப்பூசத் திருவிழாவில் தங்க ரதம். படம்: ஊடகம் -

ஆண்டுதோறும் பினாங்கில் விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இவ்வாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த திருவிழாவின்போது பக்தர்கள் வீடுகளிலேயே இருந்து வழிபாடுகளைச் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா முதன் முறையாக இவ்வாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரட்டை தேரோட்டம், தேங்காய் உடைத்தல், பந்தல் கடைகள், காவடி மற்றும் பால்குடம் தூக்குவோருக்கு இலவச உணவு விநியோகம் போன்றவை இடம்பெறாது.

பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம், ஒருமைப்பாட்டு துறை, சுகாதாரத் துறை, பினாங்கு பாதுகாப்பு மன்றம், போலிஸ் ஆகியோரின் கூட்டு முடிவு இது.

தைப்பூசம் கொண்டாடப்படும் ஜனவரி 27 முதல் 29 வரை கோயில்களுக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி ராமசாமி குறிப்பிட்டார்.

நாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் பினாங்கில் தைப்பூசம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். தங்க, வெள்ளி ரதங்களில் முருகக் கடவுளின் திருவுருவச் சிலையை வைத்து ஜார்ஜ் டவுனிலிருந்து தண்ணீர்மலை கோயில்வரை ஊர்வலம் இடம்பெறும்.

மலேசியாவில் கொவிட்-19 பரவல் வெகுவாக அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை அவசியம் என்றார் திரு ராமசாமி.

பக்தர்கள் இல்லாமல் நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் மற்றும் தண்ணீர்மலை கோயில் குழுக்கள் மட்டுமே கோயில்களில் தைப்பூசத் திருவிழாவின்போது வழிபாடுகள் செய்ய அனுமதிக்கப்படுவர்.

ஆலய வழிபாடுகளை பக்தர்கள் வீடுகளிலிருந்து காண்பதற்கு ஏதுவாக, அவற்றை இணையம் வழி நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் ஜனவரி 14 முதல் 26 வரையிலான காலகட்டத்தில் கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் பக்தர்கள் வழிபாடுகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் 24 இந்து கோயில்களில் தைப்பூச வழிபாடுகள் நடத்த தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் 2 கோயில்களுக்கும் பெர்லிஸ், கிளந்தான், மலாக்கா, திரங்கானு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு கோயிலுக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்