தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பத்துமலை தைப்பூச ரத ஊர்வலத்திற்கு அனுமதி; பினாங்கு துணை முதல்வர் சாடல்

2 mins read
806c045a-1968-48c5-9ddf-f49c154b4687
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து இம்மாதம் 27ஆம் தேதி புறப்படும் ரத ஊர்வலம் 'எங்கும் நிற்காமல்' பத்துமலை ஆலயத்திற்குச் சென்று திரும்பும். (கோப்புப் படம்: இணையம்) -

கோலாலம்பூர்: மலேசியாவில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்-பத்துமலை ரத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியதில் தே சியப் பாதுகாப்பு மன்றம் இரட்டை நிலை ப்பாடு கொண்டுள்ளதாக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கூறியுள்ளார்.

"மலேசியாவின் மாநில, மாவட்ட, உள்ளூர் அரசாங்கங்களுடனான உறவில் தேசியப் பாதுகாப்பு மன்றம் ஒருவித முரண்பாட்டைக் கொண்டுள்ளதை கவனித்தேன்.

"பாதுகாப்பு மன்றத்தின் முதல் சுற்றறிக்கையில் தைப்பூச ரத ஊர்வலங்கள், தொடர்புடைய பிற நிகழ்வுகளை நாடு முழுவதும் தடை செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

"கடுமையான கட்டுப்பாடுகளுடன் பால்காவடிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

"ஆனால் திடீரென்று, தைப்பூசத்திற்குச் சில நாட்களே இருக்கும் நிலையில், பத்துமலை கோவில் ரத ஊர்வலத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் உள்ள மற்ற கோயில்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

"கிருமிப் பரவலை மக்கள் தீவிர மாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், பாதுகாப்பு மன்றமும் தீவிரமாகவும் பொறுப்புள்ளதாகவும் இருக்க வேண்டும். இந்த பொறுப்பற்ற நடவடிக்கை கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர உதவப் போவதில்லை," என்றார் ராமசாமி.

இம்மாதம் 28ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அண்மைய உத்தரவுப்படி ஜனவரி 27ஆம் தேதி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து ரதம் புறப்பட்டு ஊர்வலமாக பத்துமலை சென்று, ஜனவரி 29ஆம் தேதி மீண்டும் மாரியம்மன் ஆலயத்திற்குத் திரும்பும். ஆனால், ரதம் புறப்பட்ட பின்னர் எங்கேயும் நிற்பதற்கு அனுமதி கிடையாது, ரதத்துடன் 10 பக்தர்களுக்கும் மேல் செல்லக்கூடாது, வழியெங்கும் இசை முழக்கங்களுக்கு அனுமதி இல்லை என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மன்றத்தின் இந்த அனுமதி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த மத்திய அமைச்சர் அனுவார் மூசா, கோலாலம்பூர் அதிகாரிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வர் என்று கூறினார்.