இஸ்லாமாபாத்: பலமுறை பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டோரின் ஆண்மையை அகற்ற வகைசெய்யும் புதிய சட்ட முன்வரைவிற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாலியல் குற்றங்களில் விரைந்து தீர்ப்பு வழங்கவும் கடுமையான தண்டனை விதிக்கவும் இந்தச் சட்ட முன்வரைவு இலக்கு கொண்டுள்ளது.
அண்மைக்காலமாக, பாகிஸ்தானில் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகமாகி வருகிறது. அதனைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கூக்குரல்கள் எழுந்த நிலையில், இந்தப் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குற்றவாளியின் உடலில் மருந்தைச் செலுத்தி, அதன்பின் வாழ்நாள் முழுவதும் அவர் உறவுகொள்ள முடியாதபடி முடக்கப்படுவார்.
தென்கொரியா, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் சட்டபடி இந்தத் தண்டனை விதிக்கப்படுவதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானில் பதிவாகும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நான்கு விழுக்காட்டிற்கும் குறைவாகவே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாக விமர்சகர்கள் சொல்கின்றனர்.