மலேசியாவின் கெடா மாநிலத்தில் இந்திய ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரை மிக அருகிலிருந்து துப்பாக்கிக்காரர்கள் சுட்டதாகக் கூறப்பட்டது.
உயிரிழந்தவர் முரளி சண்முகம், 36 என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்திலே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாமான் இந்தான் எனும் வட்டாரத்தில் நேற்று மாலை இந்தச் சம்பவம் நடந்தது.
சம்பவம் நடந்தபோது மாண்டவருடன் இருந்த அவருடைய மனைவி, மகன், நண்பர் ஒருவர் காயமின்றி உயிர்தப்பினர்.
ஒரு காபிக்கடையில் உணவு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிக்கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர். துப்பாக்கிக்காரர்களுக்கும் மாண்டவருக்கும் சுமார் ஒரு மீட்டர் தூரம் இடைவெளிதான் இருந்ததாகக் கூறப்பட்டது. முரளியை சில முறை சுட்டபிறகு, துப்பாக்கிக்காரன் ஒருவன் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி முரளியின் தலையில் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கிக்காரர்கள் அனைவரும் தலைக்கவசம், முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்திருந்ததாகக் கூறப்பட்டது. அதனால் அவர்களைத் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை என்று சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.
"யாரோ பட்டாசு கொளுத்தி போட்டதாக நான் முதலில் நினைத்தேன். வெளியே வந்து பார்த்தபின்பு தான் துப்பாக்கிச் சூடு என்று தெரியவந்தது," என்று காபிக்கடை வாடிக்கையாளர் ஒருவர் சொன்னார்.
மாண்டவர் தமது காபிக்கடைக்கு வாரந்தோறும் குடும்பத்துடன் மதிய உணவு சாப்பிட வருவார் என்று காபிக்கடை உரிமையாளர் கூறினார்.
சம்பவ இடத்தில் எட்டு துப்பாக்கிக் குண்டு கவசங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்தது. சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்புக் காமிராக்களைச் சோதித்துவருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தாக்குதலுக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

