மொரோக்கோவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த 6.8 ரிக்டர் அளவுள்ள நில நடுக்கத்தில் 2,800 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிலையில் சிங்கப்பூரில் உள்ள மொரோக்கோ நாட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
சிங்கப்பூரில் தளவாடத் துறையில் பணியாற்றி வரும் மவ்டாட் ஸக்காரியாவும் உதவிக் கரம் நீட்ட தயாராகி வருகிறார்.
இவரது குடும்பம், நிலநடுக்கம் நிகழ்ந்த மையப்பகுதியிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எர்ரசிடாவில் வசித்து வருகிறது.
சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததால் அவரது குடும்பத்தினரும் நிலநடுக்கத்தின் அதிர்வை அதிர்ச்சியுடன் உணர்ந்தனர்.
“தரையே ஆடுவதைப்போல அவர்களுக்கு இருந்தது. அனைவரும் வெளியே ஓடி வந்துவிட்டனர். அதிர்வு குறைந்ததும் அவர்கள் வீடு திரும்பினர்,” என்று திரு மவ்டாட், 31, சொன்னார்.
சிங்கப்பூரில் வசிக்கும் மற்றொரு மொரோக்கோ நாட்டவரான இப்ராகிம் பூகல், 41, ஆரம்பத்தில் குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றார்.
அவரது குடும்பம் தற்போது பாதுகாப்பாக உள்ளது.
“ரபாட்டில் உள்ள என்னுடைய குடும்பத்தினரை பலமுறை அழைத்துப் பார்த்தேன். பதிலில்லை. அங்கு நில அதிர்வு ஏற்பட்டது. இருந்தாலும் மராகேஷ் நகரத்தைப் போன்று மோசமாக இல்லை,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த அளவு உதவப் போவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய பெரும்பாலான மொரோக்கோ நாட்டவர்கள் கூறியுள்ளனர்.
நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, முதலுதவி சாதனங்கள், பணம் போன்றவை தேவைப்படும் என்பதை உணர்ந்திருக்கிறோம் என்று நடியா டுவில் லூயிஸ், 45, என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மொரோக்கோ அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள சிறப்பு நிதிக்கு நேரடியாக நிதியுதவி வழங்கலாம் என்று சிங்கப்பூர் மொரோக்கோ வர்த்தக தொழில் சபையின் நிர்வாக சபை உறுப்பினரான சாய்டா சக்ரி யோசனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சிங்கப்பூரரான உடற்பயிற்சிக் கூட உரிமையாளர் இர்விங் ஹென்சன், 45, மொரோக்கோவில் மாபெரும் அட்லஸ் மலைகளுக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் நுழைந்த 4 மணி நேரத்திற்குப் பிறகு கட்டடம் அசைவதை உணர்ந்தார்.
அறையில் அறைகலன்கள் பறக்கத் தொடங்கின. வெள்ளிக்கிழமை இரவு கடும் அதிர்வுகள் உலுக்கியபோது விளக்குகள் தரையில் விழுந்ததாக தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்த திரு ஹென்சன் கூறினார்.
அவர் உடனடியாகக் கட்டடத்தைவிட்டு வெளியேறினார். மொரோக்கோவில் அவரது முதல் நாள் அது.
ஆறு மணி நேரத்திற்கு முன்னர்தான் அவர் மராகேஷ் நகரைச் சென்றடைந்தார்.
மராகேஷ் நகரில் விமானச் சேவைகள் இயங்கவில்லை. அதனால் திரு ஹென்சனின் பயண முகவர் ஓர் ஓட்டுநருக்கு ஏற்பாடு செய்து ஏறக்குறைய 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காசாபிளாங்கா எனும் இடத்திற்குச் செல்ல ஏற்பாடு செய்தார்.
அங்கிருந்து விமானம் மூலம் திரு ஹென்சன் பிரான்சுக்குச் சென்றார்.
தற்போது தமது நண்பருடன் பிரான்சில் தங்கியிருக்கும் திரு ஹென்சன், தாம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாய்க் கூறினார்.