மராகேஷ்: அண்மையில் மொரோக்கோவை மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவில் அது 6.8ஆகப் பதிவானது.
நிலநடுக்கம் காரணமாக இதுவரை 2,800க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகவும் பலரை இன்னும் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே, மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்போரை மீட்க கூடுதல் உதவி தேவை என்று குரல்கள் எழுந்துள்ளன.
உதவி செய்ய முன்வரும் நாடுகளை மொரோக்கோ அரசாங்கம் உடனடியாக ஏற்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் பல நாடுகளின் உதவியை ஏற்க மொரோக்கா அரசாங்கத்துக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை உதவி செய்ய சில நாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஸ்பெயின், கத்தார், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
போதுமான உதவி கிடைக்காததால் நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று நிலநடுக்கம் ஏற்பட்டபோது இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உதவி கேட்டும் அலறும் சத்தம் கேட்டதாகவும் நேரமாக ஆக சத்தம் ஏதும் கேட்கவில்லை என்றும் மீட்புப் பணியாளர்களும் பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்களும் தெரிவித்தனர்.
உடனடி உதவி கிடைக்காமல் மரண எண்ணிக்கை அதிகரிப்பதாக அவர்கள் கூறினர்.
உதவி கேட்டு சத்தம் வந்த இடங்களில் இப்போது மௌனம் நிலவுவதாகத் தெரிவித்தனர்.
வீடுகள், குடும்பத்தினர், உறவினர்கள், உடைமைகள் என பலர் அனைத்தையும் இழந்து தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிர் பிழைத்தவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்குகின்றனர்.
இதற்கிடையே, நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் ‘மர்ம ஒளி’ வீசியதைக் காட்டும் காணொளிக் காட்சிகளை மொரோக்கோவின் மராகேஷ் நகரைச் சேர்ந்த மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இத்தகை ஒளிக்கு ‘நிலநடுக்க ஒளி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் இந்த ஒளி வானில் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அது என்ன, எதனால் ஏற்படுகிறது என்பன குறித்து எதுவும் தெரியவில்லை.