நெகிழிக் குழல்களைக் கைவிடும் கனடா

1 mins read
c1b57ce4-aded-4023-9e3a-9bac314224ec
நெகிழிக் குழல்கள். - படம்: எஸ்பிஎச் மீடியா

டொரொன்டோ: கனடாவில் புதன்கிழமை (20 டிசம்பர்) முதல் உணவகங்கள் நெகிழிக் குழல்கள், நெகிழி உணவுப் பெட்டிகள், நெகிழிப் பைகள், நெகிழிக் கரண்டிகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை.

நெகிழிப் பொருள் பயன்பாட்டை சட்டரீதியாகத் தடை செய்யமுடியாது என்று அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருந்தது. எனினும், இத்தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டம் கனடாவில் 2022ஆம் ஆண்டு அறிமுகமானது.

2030ஆம் ஆண்டுக்குள் நெகிழிக் கழிவை முற்றிலும் ஒழிப்பது கனடாவின் இலக்கு. அதன்படி கட்டங்கட்டமாக நெகிழிப் பொருள் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டம் அறிமுகமானது.

ஆனால், இவ்வாண்டு நவம்பர் மாதம் அத்திட்டத்துக்கு இடையூறு வந்தது. எண்ணெய், ரசாயன நிறுவனங்கள் வழக்கு தொடுத்ததைத் தொடர்ந்து இத்தடை நியாயமற்றதென்றும் அது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்றும் கனடிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது.

இருந்தாலும், அந்நாட்டு அரசாங்கம் தடையைச் செயல்படுத்தியிருக்கிறது. தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் வரை உத்தரவை நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்