தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ அபாயம்: வீடுகளிலிருந்து வெளியேற ஆயிரக்கணக்கானோருக்கு உத்தரவு

1 mins read
b4626f43-a734-4981-be45-c89594152bae
பெல்லாரட் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் அவ்விடத்தைக் கரும் புகை சூழ்ந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் கடும் வெப்பத்தால் மக்கள் அவதியுறுகின்றனர்.

இந்நிலையில், இந்தக் கடும் வெப்பத்தால் விக்டோரிய மாநிலத்தில் பெரும் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் விம்மேரியா பகுதி மிக மோசமான அளவில் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மில்டுரா கிராமப்புற நகரில் வெப்பநிலை 45 டிகரி செல்சியசை எட்டக்கூடும் என்று ஆஸ்திரேலிய வானிலை மையம் தெரிவித்தது.

பல கிராமப்புற நகரங்கள் காட்டுத் தீயால் பாதிக்கப்படக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் அந்நகரங்களிலிருந்து வெளியேறுமாறு அங்கு வாழும் ஏறத்தாழ 30,000 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மெல்பர்ன் நகருக்கு 95 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெல்லாரட் நகரில் மூண்ட காட்டுத் தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர் போராடிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 22ஆம் தேதியிலிருந்து அங்கு காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிவதாக அதிகாரிகள் கூறினர்.

காட்டுத் தீயில் ஆறு வீடுகளும் பல கால்நடைகளும் அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
ஆஸ்திரேலியாகாட்டுத் தீ