உண்மை புரிந்தது; காதல் கசந்தது

உண்மை புரிந்தது; காதல் கசந்தது

2 mins read
20a577d9-5fff-4c76-8522-93cf4ab0ca89
வாழ்நாள் முழுவதும் கணக்கு போடுவதாக இருக்கும் என்று ஆடவர் உணர்ந்தார். - படம்: பிக்சாபே

பெய்ஜிங்: வாழ்க்கைத் துணை வேண்டும் என்று நினைத்தவர், அதில் அடங்கியுள்ள குடும்பச் செலவுகள் குறித்த உண்மை நிலவரத்தை அறிந்துகொண்டதும் பின்வாங்கிவிட்டார்.

சீன சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது 35 வயது வாங் என்ற அந்த ஆடவரின் அனுபவம்.

சீனாவின் ஹாங்சோ நகரைச் சேர்ந்த வாங், 1.8 மீட்டர் உயரம், நகரில் இரு வீடுகளுக்கு உரிமையாளர், ஆண்டுக்கு ஏறத்தாழ 100,000 யுவான் (S$18,780) வருமானம் ஈட்டுபவர்.

திருமணம் செய்துகொள்ளக்கூடிய அனைத்து தகுதிகளையும் அவர் பெற்றிருந்தார்.

திருமணப் பொருத்தம் பார்க்கும் நிறுவனத்தின் மூலம் 34 வயது பெண்ணின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது.

இருவரும் நேரில் சந்தித்து இன்பமாகத் தங்கள் பொழுதைக் கழித்தனர்.

இது உண்மைக் காதல் என்றுகூட வாங் அந்தச் சந்திப்புக்குப் பிறகு நினைத்துவிட்டார்.

இருப்பினும், அதற்குப்பின் அவர் தலையில் இடி விழுந்தது போல் அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு பட்டியல் வந்தது.

‘குடும்பத்தின் வழக்கமான தினசரி செலவுப் பட்டியல்’ என்ற தலைப்பில் அந்தப் பெண் ஒரு சரிபார்ப்புப் பட்டியலை அனுப்பியிருந்தார்.

சேர்ந்து வாழ்ந்தால் பயனீட்டுக் கட்டணங்கள், மளிகைப் பொருள்கள், போக்குவரத்து, சமூக உறவாடல், ஆடைகள், மின்கருவிகள் என எத்தகைய செலவுகள் ஏற்படும் எனப் பட்டியலிடப்பட்டது.

வழக்கமான செலவுகளுக்கு இருவரும் மாதம் 9,900 யுவான் (S$1,860) ஒதுக்க வேண்டும் என்றும் தேவைக்கேற்ப அவ்வப்போது பெற்றோரின் மருத்துவச் செலவுகள், பிள்ளைக்கான செலவுகள் என வேறு செலவுகளும் இருக்கும் என்று அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.

“பணத்தால் தீர்த்துவைக்கக்கூடிய சவால்கள் பலவற்றை நாம் சந்திப்போம் என்றார் அவர். என் சம்பளத்தை ஆண்டுக்கு 200,000 யுவானாக இரட்டிப்பாக்கவும் அவர் கூறியிருந்தார்,” என்றார் வாங்.

பட்டியலைப் படிக்கும்போதே களைத்துப் போனதாகக் கூறிய ஆடவர், உண்மையான அன்புக்குப் பதிலாக வாழ்நாள் முழுவதும் கணக்கு போடுவதாக இருக்கிறதே என்று உணர்ந்தார். உறவை முறித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்