போக்குவரத்துக்கு எதிராக செலுத்தப்பட்ட கார்; ஓட்டுநரைக் கைது செய்த மலேசியக் காவல்துறை

1 mins read
12f1f353-7de9-4362-96cd-6cc08869a5e8
ஜோகூரின் பத்து பகாட் நகரில் போக்குவரத்துக்கு எதிராக கார் சென்றுகொண்டிருந்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. - படம்: தி ஸ்டார் நாளிதழ்

பத்து பகாட்: போக்குவரத்துக்கு எதிராக கார் ஓட்டியதற்காக 46 வயது ஆடவரை ஜோகூர் காவல்துறை கைது செய்துள்ளது.

கார் எதிர்த்திசையில் சென்றுகொண்டிருந்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வந்ததை அடுத்து, அந்த ஆடவர் பிடிபட்டார்.

ஜூலை 6ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ஜோகூர் மாநிலத்தின் பத்து பகாட் நகரில் போக்குவரத்துக்கு எதிராக கார் சென்றுகொண்டிருந்ததாக ஜோகூர் காவல்துறை கூறியது. இச்சம்பவம் ஆயர் ஹீத்தாமுக்கும் குளுவாங்கிற்கும் இடையிலான சாலையில் நிகழந்தது.

“அந்த ஆடவர் சாலையில் கார் ஓட்டிக்கொண்டிருந்தார். திடீரென்று எதிர்த்திசை தடத்திற்குள் காரை ஓட்டி அதில் தொடர்ந்தார். இன்னொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இக்காட்சிகள் பதிவாகின. அந்தக் காணொளி பிறகு சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

“காணொளியைப் பயன்படுத்தி சம்பவம் நிகழ்ந்த மறுநாள் பிற்பகல் 3 மணி அளவில் சந்தேக நபரை அடையாளம் கண்டு அவரைக் கைது செய்தோம். அவரது வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளோம். அந்த ஆடவருக்கு சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்று அதில் தெரியவந்துள்ளதாகவும் ஜோகூர் காவல்துறை தெரிவித்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆடவருக்கு அதிகபட்சம் ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் 5,000 ரிங்கிட்டிலிருந்து (S$1,436) 15,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்