போர்ச்சுகலில் வேலை நிறுத்தம்: இயல்புநிலை பாதிப்பு

2 mins read
de124ced-4964-495e-9039-52ed8e96b4fa
தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டுவர முனையும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொழிற்சங்கங்கள் தலைநகர் லிஸ்பனில் வியாழக்கிழமை (டிசம்பர் 11) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

லிஸ்பன்: போர்ச்சுகலில் தொழிற்சங்கங்கள் பத்தாண்டுக்குப் பிறகு வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளன.

அதனால் வியாழக்கிழமை (டிசம்பர் 11) ரயில் சேவைகள் இயங்கவில்லை. நூற்றுக் கணக்கான விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் தொடர்பான சட்டதிட்டங்களில் அரசாங்கம் சில சீர்திருத்தங்களை முன்வைத்திருந்தது.

உற்பத்தித் திறனை உயர்த்திப் பொருளியலை மேம்படுத்தும் நோக்கில் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்ததாகக் கூறுகிறது அந்நாட்டின் சிறுபான்மை வலசாரி அரசாங்கம். தொழிலாளர்கள் தொடர்பான சட்டதிட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அம்சங்களில் திருத்தங்களை அரசாங்கம் முன்வைத்திருந்தது.

ஆனால் அவை எல்லாம் நிறுவனங்களுக்குச் சாதகமாய் இருப்பதாகத் தொழிற்சங்கங்கள் குறைகூறுகின்றன. ஊழியர்களின் உரிமைகள் விட்டுக்கொடுக்கப்படுவதாக அவை தெரிவித்தன. போர்ச்சுகலின் பொருளியல் வலுவாக இருக்கிறது. வேலையின்மை விகிதமும் குறைவாக உள்ளது.

சட்டத்திருத்த மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இருப்பினும் வலசாரி ‌ஷேக (Chega) கட்சியின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் குறிப்பிட்ட சில மட்டும் இயங்கின. தலைநகர் லிஸ்பனில் சாலைகள் அமைதியாகக் காணப்பட்டன. மருத்துவமனைகள் திறந்திருந்தன. தாதியர் வேலைக்குச் செல்லாததால் அதிகமான அறுவை சிகிச்சைகளும் மற்ற மருத்துவ ஆலோசனைச் சேவைகளும் தள்ளிப்போடப்பட்டுள்ளன.

இருப்பினும் வேலைநிறுத்தத்தால் அவ்வளவு பாதிப்பில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. தனியார் துறை செயல்படுவதாக அது சொன்னது. தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை, அரசாங்கத் துறையுடன் ஒப்பிடுகையில் ஐந்துக்கு ஒன்று எனும் நிலையில் உள்ளது.

நாட்டின் பெரும்பகுதி இயங்குவதாக அமைச்சர் அன்ட்டோனியோ லெய்ட்டவ் அமாரு கூறினார். தற்போதைய வேலைநிறுத்தத்தில் பொதுத் துறையின் குறிப்பிட்ட சில பகுதியினரே ஈடுபட்டிருப்பதைப் போல் தெரிவதாக அவர் சொன்னார்.

இருப்பினும் தொழிற்சங்கங்கள், பெரிய நிறுவனங்கள் சிலவற்றில் இடையூறுகள் ஏற்பட்டதாகக் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்