லேகோஸ்: நைஜீரியாவில் அண்மையில் கத்தோலிக்கப் பள்ளி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்பள்ளியிலிருந்து 300க்கும் அதிகமான மாணவர்களை ஆயுதம் ஏந்திய நபர்கள் கடத்திச் சென்றனர். அச்சம்பவத்தில் தற்காப்புப் படைகளால் போதுமான நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று கடத்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் சிலர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம், நைஜீரிய அதிபர் போலா டினுபு எடுக்கும், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் சரியாக அமையவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அவரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம் அதிகமாக விமர்சித்துவரும் வேளையில் இந்நிலை உருவாகியுள்ளது.
நைஜீரியாவில் கிறிஸ்துவர்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்து அதன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக திரு டிரம்ப்பின் அரசாங்கம் மிரட்டி வருகிறது.
திரு டினுபு அதிபராகப் பதவியேற்று இரண்டறை ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் அவரின் பொருளியல் சீர்திருத்தங்களை கவனிப்பாளர் அமைப்புகள் பாராட்டியுள்ளன. அதேவேளை, நைஜீரியாவில் கிட்டத்தட்ட அன்றாடம் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
கூடுதல் ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகளை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு அதிக சம்பளம் தருவதுடன் கூடுதல் வளங்களை வழங்கப்போவதாக திரு டினுபு உறுதியளித்திருந்தார். அப்படியிருந்தும் அதிக தாக்குதல்கள் நடந்து வருவதையடுத்து அவரின் பாதுகாப்பு முயற்சிகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

