பிரான்சில் மாணவர்கள் போராட்டம்: 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன

பிரான்சில் மாணவர்கள் போராட்டம்: 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன

படம்: ஏஎஃப்பி

02 Oct 2026 - 7:17 pm

1 mins read

பாரிஸ்: பிரான்சில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) மூடப்பட்டுள்ளன. மாணவர் போராட்டங்கள், ‘நகர்ப்புற வன்முறையாய்’ உருவெடுத்துள்ளதாக பிரெஞ்சு அரசாங்கம் கூறியுள்ளது.

வன்முறைச் சம்பவங்களில் 65 ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும் பள்ளி உள்கட்டமைப்புகளுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரெஞ்சுக் கல்வி அமைச்சர் எட்வார்ட் ‌ஷெஃப்ரே தெரிவித்துள்ளார். தற்போது இணையம் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.

ஆசிரியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை, அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட வகுப்பறைகள், சீரழிந்த கட்டடங்களைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துகொண்டனர். ஏறக்குறைய ஈராயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டங்களின்போது 305 காவல்துறையினர் காயமடைந்ததாக பிரெஞ்சு உள்துறை அமைச்சு தெரிவித்தது.

சென்ற வாரம், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் படிக்கும் பிரெஞ்சு ‘லிசீஸ்’ (lycées) மேல்நிலைப் பள்ளிகளில் முற்றுகைகளும் போராட்டங்களும் தொடங்கின. பின்னர், நாடு முழுதும் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு அவை பரவின.

உள்துறை அமைச்சின் தகவல்படி, 1,027 ‘லிசீஸ்’ பள்ளிகள் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளன; அவற்றில் 222 பள்ளிகளில் முற்றுகைப் போராட்டங்கள் நடந்துள்ளன.

ரேன்சிலும் பாரிசிலும் உள்ள வளாகங்கள் உட்பட குறைந்தது 30 பல்கலைக்கழகங்களும் முற்றுகையிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
பிரான்ஸ்பாரிஸ்பள்ளிவன்முறைமூடல்மாணவர்கள்ஆசிரியர்கள்ஊழியர்கள்போராட்டம்ஆர்ப்பாட்டம்