‘ஒபாமாகேர்’ திட்டத்திற்கான மானியம் முடிவுக்கு வருகிறது

2 mins read
f24dbba4-beee-4b27-a530-db75c3117dd1
ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் மசோதா நிறைவேறுவதைத் தடுத்து நிறுத்தினர். - கோப்புப் படம்: புளூம்பெர்க்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒபாமாகேர் காப்பீட்டுத் திட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கான மானியம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் போட்டி போட்டு செயல்படுவதால் அந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்கான மானியத்தை நீட்டிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரு கட்சிகளும் ஒன்று மற்றொன்றுக்குப் போட்டியாக உத்தேச திட்டங்களை தாக்கல் செய்தன. ஆனால் இரு மசோதாக்களையும் இரு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நிராகரித்தனர். இதனால் ஒபாமாகேர் திட்டத்திற்கான மத்திய அரசாங்கத்தின் மானியம் ஜனவரி 1, 2026ல் காலாவதியாகிறது.

இதன் காரணமாக 24 மில்லியன் அமெரிக்கர்கள் காப்புறுதிக்கான தவணையை அதிகம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதிநிதிகள் சபை, அடுத்த வாரம் ஏதாவது ஒரு சட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்யலாம். ஆனால் அது பற்றிய விவரம் தெரியவில்லை. அப்படி நிறைவேற்றப்பட்டாலும், செனட் சபையின் ஜனநாயகக் கட்சியினரும் சில குடியரசுக் கட்சியினரும் அதனை எதிர்க்கலாம். அந்த முயற்சியைத் தடுக்க அவர்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

“இன்றைய வாக்கெடுப்புக்குப் பிறகு அமெரிக்க சுகாதார நெருக்கடியின் 100 விழுக்காடு அவர்களின் கையில் உள்ளது,” என்று ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினர்களின் தலைவர் சக் ஷுமர் குடியரசுக் கட்சியினரைப் பற்றி கூறினார்.

செனட் சபை குடியரசுக் கட்சித் தலைவர் ஜான் துனே, ஜனநாயகக் கட்சியின் மசோதா ஓர் அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறி நிராகரித்தார்.

“குடியரசுக் கட்சியினர் தீர்வு காணத் தயாராக உள்ளனர். ஆனால் ஜனநாயகக் கட்சியினருக்கு அதில் ஆர்வம் இருக்கிறதா என்பது தெரியவில்லை” என்றார் அவர்.

இரு கட்சிகளுக்கு இடையே நடைபெறும் போட்டாபோட்டியால் சில அமெரிக்கர்களுக்கு மத்திய சுகாதாரத் திட்டத்தின் கீழ் தங்கள் சுகாதாரக் காப்பீட்டைப் புதுப்பிப்பதில் நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்