தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கான பொதுமக்கள் ஆதரவு கூடியிருப்பது கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
திரு. இஷிபாவுக்கான ஆதரவு கிட்டத்தட்ட 20 விழுக்காட்டுப் புள்ளி உயர்ந்ததாக யொமியுரி நாளேடு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) தெரிவித்தது.
சென்ற மாதம் (ஜூலை 2025) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவரின் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தபோதும் திரு இஷிபாவுக்கு மக்களிடையே செல்வாக்குக் கூடியுள்ளது.
அவரின் அமைச்சரவைக்கான ஆதரவு 39 விழுக்காடானது. சென்ற மாதம் (ஜூலை 2025) நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் அது 17 விழுக்காட்டுப் புள்ளி அதிகம். அமைச்சரவையை ஏற்றுக்கொள்ளாதோர் விகிதம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 17 விழுக்காட்டுப் புள்ளி குறைந்து 50 விழுக்காடானது.
பிரதமருக்குப் பொதுமக்களின் ஆதரவு கூடியதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஜப்பான் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொண்டதும் அரிசி விலை மிதமிஞ்சிக் கூடியிருந்ததைச் சரிகட்ட விளைச்சலை அதிகரிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்ததுமே அந்தக் காரணங்கள்.
தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று திரு இஷிபா பதவி விலக வேண்டும் என்று அவரின் மிதவாத ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நெருக்கினர். ஆனால் அதனைப் புறக்கணித்த திரு இஷிபா பதவியில் தொடரப்போவதாய்த் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அவர் பதவி விலக வேண்டுமா என்ற கேள்விக்கு, 42 விழுக்காட்டினர் “ஆமாம்,” என்று கூறினர். சென்ற மாதத்தின் 54 விழுக்காட்டைக் காட்டிலும் அது குறைவு என்று யொமியுரி கருத்துக்கணிப்புக் காட்டியது.
“தேவையில்லை” என்று கூறியோரின் விகிதம் 50 விழுக்காடு. முன்னைய கருத்துக்கணிப்பில் அது 35 விழுக்காடாக இருந்தது.