சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் புதிய அனைத்துலக விமான நிலையத்தில் அதிக விமானச் சேவைகள் இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி நகரின் மையப் பகுதியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேற்கு சிட்னி அனைத்துலக விமான நிலையம் (Western Sydney International) 5.6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (5 பில்லியன் வெள்ளி) செலவில் கட்டப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அது தனது முதல் விமானச் சேவையைக் கையாளவிருக்கிறது.
எனினும், குறைவான விமானச் சேவைகளையே அந்த விமான நிலையம் ஈர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களில் தினமும் அது 12 அல்லது அதற்கும் குறைவான விமானச் சேவைகளைக் கையாளத் திட்டமிட்டிருப்பதாக விமானத்துறைத் தரவு நிறுவனமான சிரியம் தெரிவித்துள்ளது.
மாபெரும் உள்கட்டமைப்புத் திட்டம்
மேற்கு சிட்னி அனைத்துலக விமான நிலையம், ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக இடம்பெறாத ஆகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டமாகும். கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின் காணப்படாத ஆக மோசமான நெருக்கடியை உலகப் பயணத் துறை எதிர்கொண்டுவரும் வேளையில் இவ்விமான நிலையம் திறக்கப்படுகிறது. ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை, பயணக் கட்டணங்கள் அதிகரித்து வருவதால் உலக அளவில் விமான நிறுவனங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கிவருவதாகத் தெரிவித்துள்ளன.
மேற்கு சிட்னி அனைத்துலக விமான நிலையம் சீராக இயங்க காலம் ஆகும் என்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து விமான நிறுவனங்களுக்கான தலைமை நிர்வாகி ஸ்டீஃபன் பெக்கெமட் போன்றவர்கள் நம்புகின்றனர்.
அதேவேளை, தற்போது இல்லாத சந்தைக்கு இவ்விமான நிலையம் சேவையாற்ற முயற்சி செய்வதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பேராசிரியர் டேவிட் லெவின்சன் கூறுகிறார்.
மக்கள்தொகை
புதிய விமான நிலையத்தைச் சுற்றி வாழும் மக்கள்தொகையும் வர்த்தரீதியாக அதன் முன்னேற்றுக்கு உறுதுணையாக விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் சிட்னியின் 6.1 மில்லியன் மக்கள்தொகையில் பாதிப் பேர் நகரின் மேற்குப் பகுதியில் வசிப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் பெருந்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு சிட்னி மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். அதனால் இந்தியா, சீனா, வியட்னாம் போன்ற நாடுகளுக்கான விமானச் சேவைகளுக்குத் தேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பெருந்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் நியூசிலாந்து, வியட்ஜெட் ஏவியேஷன், ஃபிஜி ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்டவை மேற்கு சிட்னி அனைத்துலக விமான நிலையத்தில் சேவைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2063ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் 82 மில்லியன் பயணிகளைக் கையாளத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மேற்கு சிட்னி அனைத்துலக விமான நிலையம் சிட்னியின் முக்கிய ஆகாயப் பயண மையமாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
