கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பிரேக் இல்லாத சைக்கிள்களை ஓட்டி சாகசம் செய்த இளையர்களுக்குக் காவல்துறையோ சாலைப் போக்குவரத்துத் துறையோ அழைப்பாணை வழங்கவில்லை. மாறாக, அவர்களைத் தோப்புக்கரணம் போட வைத்தனர்.
திடீர் சோதனை நடத்திய போக்குவரத்துக் காவல்துறையினர், பதின்ம வயதினர் சிலரைத் தண்டிப்பதைக் காட்டும் இன்ஸ்டகிராம் காணொளி ஒன்று, புதன்கிழமை (ஜனவரி 1) இணையத்தில் வலம் வந்தது.
அதிகாரி ஒருவரின் உத்தரவுக்கு இணங்கி, ஏறக்குறைய 20 இளையர்கள் தோப்புக்கரணம் போட்டனர். அங்கிருந்த மற்ற அதிகாரிகள் இதைக் கண்காணித்தனர்.
வீதிகளில் பிரேக் இல்லாத சைக்கிள்களை ஓட்டியதற்காக போக்குவரத்துக் காவல்துறையால் அவர்கள் பிடிபட்டதாக நம்பப்படுகிறது. தோப்புக்கரணம் போட்ட அந்த இளையர்களுக்குப் பின்னால் அவர்கள் ஓட்டிய சைக்கிள்கள் காணப்பட்டன.
மாற்றி அமைக்கப்படும் இத்தகைய சைக்கிள்களில் அவற்றின் கைப்பிடிகள், இருக்கையின் உயரத்துக்குக் கீழே இறக்கப்படுகின்றன. இத்தகைய சைக்கிள்களில் பிரேக்குகள் அல்லது விளக்குகள் இல்லாததால், அவற்றை ஓட்டுவோருக்கு அனுபவம் சுவாரசியமாக இருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும்.

