ஜோஹனஸ்பர்க்: வெளிநாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஏழு விளையாட்டாளர்கள் தொடர்பான சர்ச்சையில், எதுவும் மூடிமறைக்கப்பட மாட்டாது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
அது பெரிய விவகாரம் என்றும் முறையான வழிகளில் கையாளப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
அமைச்சரவை அதுபற்றி விவாதித்ததாகவும் எதுவும் மூடிமறைக்கப்படக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் திரு அன்வார் சொன்னார். “விசாரணை நடத்துங்கள். கொடுக்கப்பட்ட உத்தரவு அதுதான். முறைப்படி எல்லாம் நடக்கவேண்டும். அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் அடிப்படையில் மட்டும் நாங்கள் முடிவெடுக்க இயலாது,” என்று அவர் கூறினார். மலேசியப் பிரதமர் தென்னாப்பிரிக்காவிலிருந்து எத்தியோப்பியாவுக்குச் செல்லும் முன்பு மலேசிய ஊடகவியலாளர்களிடம் பேசினார்.
“அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் நம்பகத்தன்மை குறித்து அரசாங்கம் கேள்வி எழுப்பவில்லை. இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோவின் நிலைப்பாடு சரியானது. மலேசியக் காற்பந்துச் சங்கத்தின் வாதத்தை முதலில் கேட்க வேண்டும். அமைச்சரவையைப் பொறுத்தவரை பாதை தெளிவாக இருக்கிறது. விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே அது,” என்றார் திரு அன்வார்.
சம்பந்தப்பட்ட ஏழு ஆட்டக்காரர்களும் மலேசியாவுக்கு விளையாடுவதற்கான தகுதியை உறுதிப்படுத்தும் ஆவணங்களில் மோசடி செய்யப்பட்டதாக அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் தெரிவித்தது. காற்பந்தாட்டக்காரர்களின் தாத்தா, பாட்டிகள், அர்ஜெண்டினா, ஸ்பெயின், பிரேசில், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பிறந்தவர்கள். ஆனால் அவர்கள் மலேசியாவின் ஜார்ஜ் டவுன், மலாக்கா, கூச்சிங் நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மலேசியக் காற்பந்துச் சங்கம் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஆமாம். சந்தேகமே இல்லை. ஆனால் முன்கூட்டியே அதனை முடிவுசெய்யக்கூடாது,” என்றார் மலேசியப் பிரதமர்.
அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் ஒழுங்குமுறைக் குழு, மலேசியக் காற்பந்துச் சங்கத்துக்குக் கிட்டத்தட்ட 1.8 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்தது.
விளையாட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் 11,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் காற்பந்து தொடர்பான எந்த நடவடிக்கையிலும் பங்குபெற அவர்கள் ஏழு பேருக்கும் 12 மாதத்திற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்மேளனத்தின் மேல்முறையீட்டுக் குழுவும் அந்த அபராதத் தொகைகளை உறுதிசெய்தது.

