புகார் அளிக்க வருவோரை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது: மலேசியா அமைச்சர்

2 mins read
161c3970-b5a6-4132-a00a-55123ac48422
மலேசியக் காவல்துறை அதிகாரிகள் விபத்தில் சிக்கிய பெண்களின் உடையைக் காரணங்காட்டி புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். - படம்: மலேசிய மெயில்

புத்ரஜெயா: காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களின் புகார்களை ஏற்பது அதிகாரிகளின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று என மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுடியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்திற்கு வருவோர் எந்த உடை அணிந்திருந்தாலும் அவர்களிடமிருந்து வரும் புகார்களைப் பதிவுசெய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“சரியாக உடை அணிந்திருக்கவேண்டும் என்ற நடைமுறையைக் கடைப்பிடித்தாலும் புகார்களை ஏற்பது கட்டாயம். உடையைக் காரணங்காட்டி புகார்களைப் புறக்கணிப்பது ஏற்புடையதல்ல,” என்றார் திரு சைஃபுடின் நசுடியோன்.

குறிப்பாக, விபத்தில் சிக்கிக்கொள்வோரின் புகார்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

போக்குவரத்து விபத்து தொடர்பில் புகார் அளிக்க வந்த பெண் ஒருவர் ஜாசின் காவல்துறை தலைமையகத்தில் நுழையவிடாமல் தடுக்கப்பட்டதை அடுத்து திரு சைஃபுடின் நசுடியோன் அத்தகைய அறிவுரையை முன்வைத்தார்.

இம்மாதம் 8ஆம் தேதி மாலை 5 மணியளவில் இரண்டு பெண்கள் விபத்து குறித்து புகார் அளிக்க காவல்துறை நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

முழங்காலுக்கு மேல் உடை அணிந்திருந்ததால் பெண் முறையான உடையை அணிந்த பிறகே அவரின் புகார் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலமுறை மன்றாடிய அந்தப் பெண், அருகில் உள்ள கடைத்தொகுதிக்குச் சென்று நீண்ட கால் சட்டையை வாங்கி அணிந்தபின் காவல் நிலையத்திற்குத் திரும்பினார்.

சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து மலாக்கா காவல்துறை தலைமை துணை ஆணையர் சுல்காய்ரி முக்தார் விசாரணை தொடங்கியதாகக் குறிப்பிட்டார்.

காவல்துறை அதிகாரிகள் புகார் அளிப்பதற்கான தனிநபரின் உரிமையை மறுக்கக்கூடாது என்று மின்னிலக்க அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.

உடையைக் காரணங்காட்டி புகார் அளிக்க வருவோர் புறக்கணிக்கப்படக்கூடாது என்ற அவர், அதுகுறித்து காவல்துறைத் தலைவர் தெளிவான வழிகாட்டியை நாட்டில் உள்ள எல்லாக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கும்படி அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்