அமெரிக்காவில் விடுமுறை நாள் புயலால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

அமெரிக்காவில் விடுமுறை நாள் புயலால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

27 Nov 2026 - 9:55 am

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையின் பெரும்பகுதியில் வியாழக்கிழமை (நவம்பர் 26) வீசிய கடும் புயலால் பல்லாயிரக்கணக்கானோர் மின்துண்டிப்பால் பாதிக்கப்பட்டனர்.

அன்றைய தினம் நன்றி நவிலும் நாளுக்கான பொது விடுமுறையாகும்.

வீசிய புயலால் பொதுமக்கள் உறவினர்களைக் காணச் செல்லும் பயணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

விவசாயிகளுக்கு நன்றி நவில்தல் நாள், 1941ஆம் ஆண்டுமுதல் பொதுவிடுமுறையாக அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

மணிக்கு 112 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்து, நூறாயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இப்புயல் காரணமாக அமெரிக்காவில் 417 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, பிற்பகலுக்குள் ஏறத்தாழ 1,800 விமானங்கள் தாமதமாகின.

வாஷிங்டன், நியூயார்க் ஆகிய நகரங்களின் முக்கிய விமான நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

கனமழையால் கடலோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மழையில் நனைந்த நிலமும் பலத்த காற்றும் மரங்கள் சாய்வதற்கும் மின்சாரத் தடைக்கும் வழிவகுக்கும் என மின்நிறுவனங்கள் எச்சரித்தன.

வெள்ளிக்கிழமை, சிங்கப்பூர் நேரம் காலை 5.06 மணி நிலவரப்படி, அமெரிக்கா முழுவதும் 836,000க்கும் அதிகமானோருக்கு மின்சாரம் தடைப்பட்டது.

வெர்ஜீனியா, மேரிலாந்து, டெலவேர், நியூ ஜெர்சி, நியூயார்க், நியூ இங்கிலாந்தின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 80 முதல் 112 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. நியூயார்க் நகரின் லாகார்டியா விமான நிலையத்தில் பிற்பகலில் காற்றின் வேகம் மணிக்கு 90 கிலோமீட்டரை எட்டியது.

பலத்த காற்றும் கடல் பேரலையும் இணைந்து தாழ்வான கடலோரக் குடியிருப்புகளில் வெள்ளத்தை ஏற்படுத்தின. இரவோடு இரவாகப் புயல் நியூ இங்கிலாந்து நோக்கி நகர்வதால் மத்திய அட்லாண்டிக் பகுதிகளில் நிலைமை படிப்படியாகச் சீராகும் என அமெரிக்கத் தேசிய வானிலை அமைப்பு கூறியது.

இருப்பினும், வெள்ளிக்கிழமையன்று கிழக்குக் கடற்கரையின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 56 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மோசமான வானிலை அச்சுறுத்தலால், நியூயார்க் நகரில் 100ஆவது ஆண்டாக நடைபெறவிருந்த நன்றி நவிலும் நாள் அணிவகுப்பு முதன்முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்