சாவ் பாவ்லோ: பிரேசிலியர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியது, பாம்புகளைப் பற்றியன்று. தேள்களையே.
கொடுக்குகள் விஷத்தன்மை என்பதால் அஞ்சப்படும் தேள்களின் எண்ணிக்கை நகரமயமாதல், வெப்பமயமாதல் காரணமாக அதிகரித்து வருகின்றன.
பிரேசிலில் பரவலாகக் கண்டறியப்படும் மஞ்சள் நிற தேள், தென்னமெரிக்காவிலேயே ஆக ஆபத்தான தேளாகக் கருதப்படுகிறது.
ஆக அண்மைய தரவுகளின்படி, 2023ல் பிரேசிலில் தேள் கொட்டியதில் 152 பேர் உயிரிழந்தனர். ஒப்புநோக்க, பாம்பு கடித்ததால் 140 மரணங்கள் ஏற்பட்டன. 2019ல் தேள் கொட்டியதால் ஏற்பட்ட 95 மரணங்களைவிட இது அதிகம்.
பிரேசிலின் சுகாதார அமைச்சுத் தரவின்படி, 2023ல் 200,000க்கும் அதிகமான தேள்கொட்டிய சம்பவங்கள் பதிவாகின. பத்து ஆண்டு காலத்துக்கு முன்பிருந்ததைவிட இது 250 விழுக்காடு அதிகம்.
மஞ்சள் தேள் கொட்டினால் ஆரோக்கியமான பெரியவர்களுக்கு வலி, வாந்தி, வியர்வை அதிகரிப்பு, நடுக்கம் போன்று லேசான முதல் மிதமான அறிகுறிகள் ஏற்படும்.
ஆனால் அதிர்ச்சி, நுரையீரலில் நீர்கோத்தல், இதயச் செயலிழப்பு போன்ற கடுமையான அறிகுறிகளும் ஏற்படலாம். இவை சிறார்களுக்கும் முதியவர்களுக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

