ஏலத்தில் பெருந்தொகை ஈட்டிய டைட்டானிக் பயணியின் கடிகாரம்

2 mins read
5d8ea5c8-16ae-4f3c-a3f7-d6de4d0445bc
சட்டைப் பையில் வைக்கக்கூடிய அந்தத் தங்கக் கடிகாரம், டைட்டானிக் கப்பல் மூழ்கிய கணத்தில் செயலிழந்துவிட்டது. - படம்: BNPS

வில்ட்ஷையர்: டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது உயிரிழந்த செல்வந்தர் ஒருவரின் உடலிலிருந்து மீட்கப்பட்ட தங்கக் கடிகாரம் அண்மைய ஏலத்தில் பெருந்தொகையை ஈட்டியுள்ளது.

சட்டைப்பையில் வைக்கக்கூடிய அந்தக் கடிகாரம் பிரிட்டனின் வில்ட்ஷையர் பகுதியில் சனிக்கிழமை (நவம்பர் 22) நடந்த ஏலத்தில் 1.78 மில்லியன் பவுண்டுக்கு (ஏறத்தாழ S$3.05 மில்லியன்) விற்பனையானது.

1912 ஏப்ரல் 14ஆம் தேதி, பனிப்பாறையில் மோதியதை அடுத்து டைட்டானிக் கப்பல் மூழ்கியது. அதில் பயணம் செய்த 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பணக்காரர்களான இசிடார் ஸ்ட்ராஸ் - ஐடா (Isidor Straus - Ida) தம்பதியும் அடங்குவர்.

சில நாள்கள் கழித்து அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து திரு ஸ்ட்ராசின் சடலமும், அந்தத் தங்கக் கடிகாரம் உள்ளிட்ட அவரது உடைமைகளும் மீட்கப்பட்டன.

அந்தக் கடிகாரம், 1888ஆம் ஆண்டில் திருமதி ஐடா தம் கணவரின் 43வது பிறந்தநாளுக்குப் பரிசளித்தது என்று நம்பப்படுகிறது. கடிகாரம் 02:20க்கு செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. டைட்டானிக் கப்பல் பெருங்கடலில் மூழ்கிய தருணத்தில் அது நின்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பவேரியாவில் பிறந்த திரு ஸ்ட்ராஸ், அமெரிக்க வர்த்தகராகவும் அரசியல்வாதியாகவும் இருந்தார். கப்பல் மூழ்கிய இரவில் அவரது வயதைக் கருத்தில்கொண்டு உயிர்காப்புப் படகில் இடம் தந்தபோது அவர் நிராகரித்துவிட்டதாகவும் திருமதி ஐடாவும் தம் கணவருக்கு அருகிலேயே மரிக்க விரும்புவதாகக் கூறிப் படகில் ஏறவில்லை என்றும் கூறப்படுகிறது.

திருமதி ஐடாவின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

கப்பலில் இருந்தபோது அவர் எழுதிய கடிதம், ஏலத்தில் 100,000 பவுண்டுக்கு விலைபோனது. டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தோர் பட்டியலும் அந்தக் கப்பல் தொடர்பான நினைவுப்பொருள்களும் அண்மைய ஏலத்தில் மொத்தம் 3 மில்லியன் பவுண்டுக்கு விற்பனையாயின.

கப்பல் மூழ்கி 113 ஆண்டுகள் கடந்த பின்னும் திரு ஸ்ட்ராசின் கடிகாரம் ஏலத்தில் பெருந்தொகை ஈட்டியிருப்பது, அந்தக் காதல் தம்பதி மீது உலகம் கொண்டிருக்கும் மரியாதைக்குச் சான்று என்று ஏலத்துக்கு ஏற்பாடு செய்தோர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்