புளோரிடா: தங்கத்தில் கழிப்பறை. 100 கிலோகிராமுக்கும் அதிகமான 18 காரட் தங்கத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது அது. தங்கக் கழிப்பறையின் விலை 12.1 மில்லியன் அமெரிக்க டாலர் ($15.7 மில்லியன்). செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) ஏலத்தில் அது விற்கப்பட்டது.
அமெரிக்க நிறுவனமொன்று அதனை வாங்கியது. ‘ரிப்ளீஸ் பிலீவ் இட் ஆர் நாட்’ எனும் அந்த நிறுவனம், அவ்வளவு அதிக விலை கொடுத்துத் தங்கக் கழிப்பறையை வாங்கியதை யாராலும் நம்பமுடியவில்லை.
நிறுவனம் வாங்கிய அரியவகைப் பொருள்களில் அதுவும் ஒன்று என்று சொல்லப்பட்டது.
“ரிப்ளீசின் கலைப்பொருள்களில் அதுவே ஆக மதிப்புமிக்கது, பளபளப்பானது,” என்று அதன் பேச்சாளர் சுஸேன் ஸ்மகாலா-போட்ஸ் தெரிவித்தார்.
கழிப்பறையை உருக்கினால் தங்கம் மட்டும் இன்றைய நிலையில் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போகும் என்றார் அவர்.
உலகெங்கும் பல கலைப்பொருள்களைக் காட்சிக்கு வைத்துள்ளது ரிப்ளீஸ்.
‘அமெரிக்கா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்தக் கழிப்பறை எங்கு வைக்கப்படும் என்பதை நிறுவனம் இன்னும் சொல்லவில்லை. கலைஞர் மொரிஸியோ கெட்டலானின் கைவண்ணத்தில் உருவானது அது.
என்றாவது ஒரு நாள், பார்வையாளர்கள் அதனைப் பயன்படுத்த அனுமதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

