தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா: அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்கிறது

2 mins read
6bd74314-bb39-497a-aeb2-2fe042db9afc
விவசாயிகள், சில்லறை விற்பனையாளர்கள் பாதுகாக்கும் எல்லைக்கோடு வரையறையை தங்கள் தரப்பு பேச்சுவார்த்தைகளின்போது முன்வைத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இந்தியா, தன்னைப் பாதுகாக்க வேண்டிய எல்லைக்கோடுகள் ஒருசில இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) தெரிவித்தார்.

ரஷ்ய எண்ணெய்யை இந்தியா கூடுதலாக வாங்கியதை அடுத்து, அமெரிக்கா இறக்குமதி செய்யும் இந்தியப் பொருள்கள் கூடுதல் வர்த்தக வரியை எதிர்நோக்குகின்றன. 

அமெரிக்காவில் இந்திய இறக்குமதிகள் மீது ஏற்கெனவே 25 விழுக்காடு வரிவிதிப்பு நடப்பில் உள்ளது. அவற்றின்மீது கூடுதலான 25 விழுக்காடு வரி, இம்மாதம் 27ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

“பேச்சுவார்த்தைகளில் தாண்ட முடியாத எல்லைக்கோடுகள் சிலவற்றை நாங்கள் முன்வைத்துள்ளோம். விவசாயிகள், சிறு உற்பத்தியாளர் உள்ளிட்டோரின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும்,” என்று புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் திரு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ரஷ்ய எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து வாங்குவதைக் காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இம்மாதத் தொடக்கத்தில் இந்தியப் பொருள்களின் மீது மேலும் 25 விழுக்காடு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்தார். இந்த முடிவால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் 25 முதல் 29 வரை புதுடில்லிக்கு வரவிருந்த தங்கள் பயணத்தை அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோர் ரத்து செய்துள்ளதால், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 27 வர்த்தக வரி காலக்கெடுவிற்குள் திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கையும் சுக்குநூறாகியது. 

இந்தியாவின் விவசாயம், பால் பண்ணைத் துறைகளை அனைத்துலக நிறுவனங்களுக்குத் திறப்பது, ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்த மறுப்பது போன்ற விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, ஐந்து சுற்றுகளாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முடங்கிப்போனதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதைச் சுட்டிக்காட்டிய இந்திய வெளியுறவு அமைச்சு, ரஷ்ய எண்ணெய்யை வாங்கியதற்காக இந்தியா நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்