தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய கிழக்கு செல்லும் மெர்சி ரிலிஃப் அமைப்பின் இருவர்

2 mins read
52c9fdb6-ab17-4b5d-9d2e-819445217967
(வலமிருந்து) மெர்சி ரிலிஃப் அமைப்பின் தலைவர் சத்வந்த் சிங், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக வேந்தர் ஹலிமா யாக்கோப், அமைச்சர்கள், ஓங் யி காங், கான் சியாவ் ஹுவாங் ஆகியோர். - படம்: சாவ்பாவ்

இஸ்ரேல், ஹமாஸ் பேராளி இயக்கத்துக்கு இடையே போர் உக்கிரமடைந்து வருகிறது. எனினும், பேரிடர் நிவாரண அமைப்பான மெர்சி ரிலிஃப் அங்குள்ள மக்களின் தேவையை அறிய, அங்கு இடம்பெறும் திட்டங்களை கண்காணிக்க, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்க அந்த அமைப்பு அங்கு இருவரை அனுப்ப உள்ளது.

​இவற்றுடன், தற்போதைய ரமலான் மாதத்தில் அங்கிருக்கும் குறைந்தது 200 குடும்பங்களுக்கு இஃப்தார் எனப்படும் நோன்பு துறப்பு உணவையும் அவ்விருவரும் வழங்குவர் என்று கூறப்படுகிறது.

​இதை வியாழக்கிழமை (மார்ச் 20ஆம் தேதி) தோ பாயோவில் உள்ள மெர்சி ரிலிஃப் அலுவலகத்தில், ஏறத்தாழ 60 விருந்தினர்கள் பங்கேற்ற இஃப்தார் விருந்தில், அதன் தலைவர் சத்வந்த் சிங் அறிவித்தார்.

​அந்த இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக வேந்தர் ஹலிமா யாக்கோப், கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் லுவிஸ் இங், சக்தியாண்டி சுப்பாட் ஆகியோருடன் நேப்பாள, இந்தோனீசிய, பங்ளாதேஷ் தூதரக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இது பற்றிக் குறிப்பிட்ட திரு சிங், “​கடந்த 2003ஆம் ஆண்டு எங்கள் அமைப்பு செயல்படத் தொடங்கியதிலிருந்து நாங்கள் பிரச்சினைக்குரிய இடங்களுக்கு நேரடியாகச் சென்று எங்கள் கைப்பட நிவாரணம் வழங்கியுள்ளோம். இவை யாவும் எங்கள் பங்காளிகள், நன்கொடையாளர்கள், தொண்டூழியர்கள் இன்றி சாத்தியப்பட்டிருக்காது,” என்று கூறினார்.

​இந்த மத்திய கிழக்கு பயணம் மெர்சி ரிலிஃப் நிர்வாக இயக்குநர் முகம்மது அஷிக் தாவுத் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்குக் கரைக்குச் செல்லும் முதல் பயணம். அவருடன் சக இயக்குநர் மேஜர் சிங் கில்லும் செல்வார்.

​அவ்விருவரும் மெர்சி ரிலிஃப் பங்காளிகளுடன் அங்குள்ள பாதுகாப்பு நிலவரத்தை தொடர்ந்து ஆராய்வர் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்