வியன்னா: சுவிஸ் வங்கியான யுபிஎஸ், 2027க்குள் மேலும் 10,000 வேலைகளைக் குறைக்கக்கூடும் என்று சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) தெரிவித்தது.
இந்தச் செய்தி குறித்து பதிலளித்த யுபிஎஸ், வேலைகள் குறைக்கப்படுவதன் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை. எனினும், சுவிட்சர்லாந்திலும் உலகளவிலும் வேலைக் குறைப்பின் எண்ணிக்கையை ‘முடிந்தவரை குறைவாக’ வைத்திருக்கப் போவதாக அவ்வங்கி கூறியது.
தனக்குப் போட்டியாகத் திகழ்ந்த கிரெடிட் சுவிஸ் வங்கியை 2023ல் யுபிஎஸ் வாங்கியதைத் தொடர்ந்து அது வேலைகளைக் குறைத்து வருகிறது.
2024 இறுதி நிலவரப்படி, யுபிஎஸ் வங்கியில் ஏறத்தாழ 110,000 பேர் வேலை செய்தனர். அதன்படி, 10,000 வேலைகள் குறைப்பு என்பது அந்த வங்கியின் மொத்த வேலைகளின் எண்ணிக்கையில் 9 விழுக்காடாகும்.

