அமைதித் திட்டம் குறித்து அமெரிக்காவுடன் இணக்கம்: உக்ரேன்

2 mins read
4ddbc1b7-a63c-4c80-b8b5-f6640b45f680
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (இடம்), அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன் / கீவ்: ர‌‌ஷ்யாவுடனான அமைதித் திட்டத்தின் தொடர்பில் அமெரிக்காவுடன் இணக்கம் கண்டிருப்பதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.

மூவாண்டுக்கும் மேல் கீவுக்கும் மாஸ்கோவுக்கும் இடையில் நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கம் கொண்டது அந்தத் திட்டம்.

அமைதித் திட்டத்தில் மொத்தம் 28 அம்சங்கள் உள்ளன. திட்டத்திற்கான வரைவை அமெரிக்கா சென்ற வாரம் உக்ரேனிடம் கொடுத்தது. ஜெனீவாவில் வார இறுதியில் நடைபெற்ற பேச்சில் அமெரிக்க-உக்ரேனிய அதிகாரிகள் அதுகுறித்து விவாதித்தனர்.

அமைதித் திட்ட வரைவில் ர‌‌ஷ்ய-உக்ரேனியத் தரப்புகளின் கருத்துகளையும் சேர்த்துக்கொண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டார்.

“மாஸ்கோவில் ர‌‌ஷ்ய அதிபர் புட்டினைச் சந்திக்குமாறு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃபிடம் கூறியுள்ளேன். அதே நேரம், ராணுவச் செயலாளர் டேனியல் டிரிஸ்கோல், உக்ரேனியத் தரப்பினருடன் பேச்சு நடத்துவார்,” என்றார் திரு டிரம்ப்.

திரு டிரிஸ்கோல் இந்த வாரம் கீவுக்கு வரக்கூடும் என்று அதிபர் ஸெலென்ஸ்கியின் படைத் தளபதி கூறினார்.

புதிய உடன்பாட்டின் வரைவு குறித்து இதுவரை ர‌‌ஷ்யாவிடம் ஆலோசனை எதுவும் கேட்கப்படவில்லை என்று கிரெம்ளின் இதற்கு முன்னர் கூறியிருந்தது. திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்களைத் தான் ஏற்காமல் போகக்கூடும் என்றும் அது எச்சரித்திருந்தது.

ர‌‌ஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ், அமெரிக்காவின் ஆரம்பக்கட்ட திட்ட வரைவுக்கு மாஸ்கோ ஆதரவு தெரிவித்ததைச் சுட்டினார். ஆனால் அதில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் நிலைமையின் அடிப்படையே மாறக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

புதிய திட்டத்தின் வரைவு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) காலை வரை ர‌‌ஷ்யாவின் கையில் கிடைக்கவில்லை என்றார் திரு லாவ்ரோவ். அமெரிக்காவின் அமைதி முயற்சிகளை ஐரோப்பா கீழறுப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

ர‌‌ஷ்யாவின் அக்கறைகள் குறித்து அமெரிக்கா கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்