ஜெட்டா: ரஷ்யாவுடனான போரை 30 நாள் நிறுத்தும் அமெரிக்காவின் உத்தேசத் திட்டத்தை உக்ரேன் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து மார்ச் 11ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவின் ராணுவ உதவி, உளவுத் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைத் தொடர அமெரிக்கா சம்மதித்துள்ளது.
இரு நாடுகளின் கூட்டறிக்கையில் பேச்சுவார்த்தை விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் அமெரிக்க, உக்ரேனிய அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ, உக்ரேன் ஏற்றுக் கொண்டதால் சண்டை நிறுத்தத் திட்டத்தை ரஷ்யாவுக்குக் கொண்டு செல்வோம். இனி ரஷ்யாவின் கையில் போர்நிறுத்தம் உள்ளது என்றார்.
“அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்றே (மார்ச் 11) போருக்கு முடிவுகட்ட வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே ரஷ்யா எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இதற்குச் சம்மதிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்போதுதான் உண்மையான சண்டை நிறுத்தத்திற்கான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியும்,” என்று செய்தியாளர்களிடம் திரு ருபியோ தெரிவித்தார்.
முன்னதாக சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தை எட்டு மணி நேரம் நடைபெற்றது. அதில் போரை நிறுத்துவதற்கான சாதக, பாதக அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது. அப்போதிலிருந்து அது படிப்படியாக முன்னேறி வருகிறது. உக்ரேனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா கைப்பற்றியிருக் கிறது. இப்பகுதிகள் தமது நாட்டுடன் இணைக்கப்பட்டதாகவும் 2014ல் ரஷ்யா அறிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
உக்ரேன், நேட்டோவில் சேர விரும்பியதால் அது, தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறிய ரஷ்யா, உக்ரேன் மீது போர் தொடுத்தது.
ரஷ்யா, உக்ரேன் ஆகிய இரு நாடுகளுடன் விரைவில் முழுமையான சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்றார் திரு ருபியோ.
“ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறது. போர் தொடர்ந்து நடைபெறுகிறது. மக்கள் மடிகிறார்கள். மக்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. இரு நாட்டு மக்களும் காயம் அடைகின்றனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் சண்டை நிறுத்தத் திட்டத்திற்கு ரஷ்யா எத்தகைய பதிலை அளிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் அமைதி பேச்சு குறித்து விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் முன்னதாகக் கூறியிருந்தார்.
ரஷ்யா முழுமையாக உரிமை கோரும் அல்லது தனது கட்டுப்பாட்டில் உள்ள நான்கு உக்ரேனிய வட்டாரங்களிலிருந்து உக்ரேன் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்துகிறது.
சவூதி அரேபியாவில் இருந்த உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை. ஆனால் உத்தேச சண்டை நிறுத்தம் ஆக்ககரமான முன்னேற்றம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

