மலேசியாவின் 2027 வரவு செலவுத் திட்டத்தில் அவசர மாற்றங்கள்

மலேசியாவின் 2027 வரவு செலவுத் திட்டத்தில் அவசர மாற்றங்கள்

படம்: ராய்ட்டர்ஸ்

15 Aug 2026 - 5:40 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அக்டோபர் தொடக்கத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்னர், அவசரமான சில மாற்றங்களைத் தாம் அறிவிக்கப்போவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கக் கொள்கைகள், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் உட்கட்சி விவகாரங்கள், மத்திய அரசில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டதாக அம்மாற்றங்கள் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

பக்கத்தான் கெஅடிலான் ராக்யாட் எனப்படும் மக்கள் நீதிக்கட்சியின் தலைவருமான திரு அன்வார், இம்மாற்றங்களைப் பற்றிய தகவல்கள் சிலவற்றை வரும் திங்கட்கிழமை முதற்கொண்டு, சுதந்திர தினத்திற்கும் மலேசிய தினத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பகிரப்போவதாகக் கூறினார்.

“எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நான் மற்ற மாற்றங்களை அறிவிக்கவுள்ளேன்,” என்றும் திரு அன்வார் கூறினார்.

நிதியமைச்சருமான திரு அன்வார், அரசாங்கக் கொள்கைகளைத் திறம்பட மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஏற்பட்ட தோல்விக்கு கொள்கைகளில் உள்ள குறைபாடுகள் காரணம் அல்ல எனக் குறிப்பிட்டார். மாறாக, தலைமைத்துவ நிலையில் ஏற்பட்ட தகவல் தொடர்பு குறைபாட்டினாலேயே அத்தோல்வி ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

சில தகவல்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கலாம் என்பதால், கொள்கைகளை இன்னும் சிறப்பாகவும் திறமையாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார்.

“அதே நேரத்தில், நாட்டின் பொருளியல் செயல்பாடு நன்றாக உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. இந்தக் காலாண்டில் வளர்ச்சி 6 விழுக்காட்டை எட்டும் என்ற மத்திய வங்கியின் கணிப்பு உட்பட, புள்ளிவிவரங்கள் மிகவும் சாதகமாக உள்ளன,” என்றார் திரு அன்வார்.

இருப்பினும், தகவல் தொடர்பு வலுவாக இல்லை என்றால் அரசாங்கத்தின் நற்காரியங்கள் மக்களின் மனங்களில் நிற்காது என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் ஒத்துழைக்க உறுதியளித்த துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான சாஹித் ஹமிடியைத் திரு அன்வார் பாராட்டினார்.

கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க முன்வந்த சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரி துன் ஓபேங், சபா தலைவர்கள் ஆகியோருக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மாற்றங்கள் கட்டம்கட்டமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் தனித்து ஆட்சி செய்யும் அரசாங்கம் இல்லை. வெவ்வேறு மாநிலங்களுக்கு வெவ்வேறு தேவைகள் உள்ளன. எனவே, எந்தவொரு மாற்றத்தையும் செய்வதற்கு முன் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

உடனடி மாற்றத்திற்காக அழுத்தம் கொடுக்கும் சில தரப்பினர், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர் என்றும் திரு அன்வார் கூறினார். இருப்பினும், அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம்அரசாங்கம்பிரதமர்மக்கள்தொகை