ஈரானின் துறைமுகத்திலிருந்து வெளியேறிய கப்பல்: தாக்கிய அமெரிக்கா

ஈரானின் துறைமுகத்திலிருந்து வெளியேறிய கப்பல்: தாக்கிய அமெரிக்கா

படம்: ராய்ட்டர்ஸ்

28 Nov 2026 - 9:58 am

1 mins read

துபாய்: ஈரானிய துறைமுகத்திலிருந்து வெளியேற முயன்ற வர்த்தகக் கப்பலைத் தாக்கியதில் அது பயணம் செய்யமுடியாமல் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய தளபத்தியம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) தெரிவித்தது.

மத்திய கிழக்கில் ஜூலை மாதம் முதல் ஈரானின் துறைமுகங்கள் செயல்படாமல் தடை செய்யும் நடவடிக்கையை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்தியது.

அதன்படி பலாவ் என்ற நாட்டின் கொடியை ஏந்திக்கொண்டு ஓமான் வளைகுடாவில் சென்ற கப்பலை அமெரிக்க ராணுவம் குறிவைத்து தாக்கியுள்ளது. ஈரானின் பண்டார் அபாஸ் துறைமுகத்திலிருந்து வெளியேறிய அக் கப்பல் நகர முடியாமல் சேதமடைந்தாலும் அதன் சிப்பந்திகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்கா உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள முற்றுகையும் தடைகளும் முறியடிக்கப்படும் என்றும் சூளுரைத்தார்.

இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க ராணுவம் ஈரானில் இருந்து ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் ஆகியன நிலம் வழியாகவும் கடல் பாதைகளிலும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடை விதித்தது. அதன் அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிரிகளின் முற்றுகையை முறியடிக்கும் பணிகள் தொடர்வதாகவும், தங்கள் துறைமுகங்கள் தடையின்றி செயல்படுவதாகவும் ஈரானியக் கடற்படைத் தளபதி ஷாஹ்ராம் ஈரானி அரசாங்கத் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

அனைத்துப் பிரசாரங்களுக்கும் மாறாகக் கடல்வழிப் பாதுகாப்புப் பணிகள் நடைபெறுவதாகவும், கப்பல் உரிமையாளர்களுக்கும் மாலுமிகளுக்கும் துணைநிற்பதாகவும், ஈரானியப் பொருளியலின் உயிர்நாடியைத் துண்டிக்கும் எதிரிகளின் முயற்சி இதுவரை தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்