வாஷிங்டன்: கல்லீரல் தொற்றுக்கு எதிராகப் போடப்படும் ‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசியைப் பிறந்த குழந்தைகளுக்குப் போடுவதை நிறுத்துமாறு பரிந்துரைத்துள்ளது அமெரிக்க சுகாதாரச் செயலாளரால் நியமிக்கப்பட்ட மருத்துவ ஆலோசனைக் குழு.
பிறந்த குழந்தைகளுக்கு ‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசி போடும் முறை நெடுங்காலமாகவே நடப்பிலிருந்து வருகிறது. இதனை 1991ஆம் ஆண்டிலிருந்து பரிந்துரைத்து வந்துள்ளது அமெரிக்கா.
இந்தத் தடுப்பூசியால் இதுவரை 90,000 மரணங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் சுட்டின.
இதற்கிடையே நோய்த்தடுப்பாற்றல் நடைமுறைகளுக்கான ஆலோசனைக் குழு (ஏசிஐபி) தடுப்பூசி சார்ந்த இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர நவம்பர் 5 அன்று வாக்களித்தது.
தடுப்பூசி யாருக்கு, எப்போது அளிக்க வேண்டும் என்பது போன்ற தடுப்பூசிக் கொள்கைகள்குறித்து நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலையங்களுக்கு ‘ஏசிஐபி’ பரிந்துரைகள் வழங்குகின்றது.
அவ்வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுகாதாரச் செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் ‘ஏசிஐபி’ அமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் பணிநீக்கம் செய்தார். மேலும், தடுப்பூசிகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்தோரை அவ்விடங்களுக்கு நியமித்தார்.
இதனால், இக்குழு தற்போது பரிந்துரைத்துள்ள இந்த முடிவு அமெரிக்காவில் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதன்மூலம் பிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகுறித்த முடிவு, பெற்றோர் கைவசம் சென்றுள்ளது.
இதன் அடிப்படையில் பச்சிளங் குழந்தைகளின் சுகாதார நலன் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்று பொதுச் சுகாதார நிபுணர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், இந்த முடிவு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசி தொடர்பில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரை மிகவும் சிறந்த முடிவு என்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் பாராட்டு குறிப்பைப் பதிவிட்டுள்ளார்.
மேலும், சிறார்களுக்கான தடுப்பூசி தொடர்பிலான அனைத்து பரிந்துரைகளையும் மறுஆய்வு செய்யுமாறும் அவர் சுகாதாரத் துறையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

