பசிபிக்கில் அமெரிக்கா கூடுதல் பங்களிக்க வேண்டும்: நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர்

பசிபிக்கில் அமெரிக்கா கூடுதல் பங்களிக்க வேண்டும்: நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர்

படம்: ராய்ட்டர்ஸ்

21 Sep 2026 - 4:23 pm

2 mins read

வெலிங்டன்: பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்கா அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்று நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

உலகளாவிய சூழல் மேலும் சிக்கலாகவும் அமைதியற்றதாகவும் மாறி வருவதாக அவர் திங்கட்கிழமை (செப்டம்பர் 21) எச்சரித்தார். பசிபிக் வட்டாரத்தில் விரும்பத்தகாத அரசியல் நகர்வுகள் இடம்பெற்று வருவதை அவர் சுட்டினார். அதனால் இங்கு அமெரிக்காவின் பங்களிப்பு அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

நியூசிலாந்தில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் முக்கிய உரையாற்றிய அவர், தற்போதைய சூழல் சாதகமாக இல்லை என்றார்.

அனுமதியின்றியோ முன்னறிவிப்பின்றியோ ஏவுகணைச் சோதனைகளை நடத்துதல், தென்பகுதியை நோக்கிக் கடற்படைப் பயிற்சிகள் மெல்ல மெல்ல விரிவடைதல், எல்லை தாண்டிய குற்றச்செயல்களால் பசிபிக் நாடுகளுக்கும் நியூசிலாந்திற்கும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

சீனாவை நேரடியாகத் திரு பீட்டர்ஸ் பெயர் குறிப்பிடவில்லை. தென்பசிபிக் பெருங்கடலில் சீனா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை நடத்தியதற்கு அவர் ஏற்கெனவே கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார்.

அந்த ஏவுகணைச் சோதனை சீனாவின் வருடாந்தர ராணுவப் பயிற்சியின் வழக்கமான நடைமுறை என்றும் அது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் அல்லது இலக்கிற்கும் எதிரானது அன்று என்றும் சீனாவின் அதிகாரபூர்வ ‘சின்ஹுவா’ செய்தி நிறுவனம் அப்போது கூறியிருந்தது.

“அமெரிக்கா பசிபிக் வல்லரசு; வட்டாரச் செழிப்புக்கும் பாதுகாப்புக்கும் ஆதரவாக பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் அதிகப் பங்களிப்பு நமக்குத் தேவை,” என்று திரு பீட்டர்ஸ் கூறினார்.

மூன்றாவது முறையாக வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றும் திரு பீட்டர்ஸ், போதைப்பொருள் கடத்தலை, வட்டாரக் கடலோரப் பகுதிகளில் பரவிவரும் ‘கொடிய தீமை’ என்று வருணித்தார். போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான திறனை பசிபிக் நாடுகள் வளர்த்துக்கொள்ள உதவுவதில் அமெரிக்காவிற்கு முக்கியப் பங்கு உண்டு என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
நியூசிலாந்துவெளியுறவுஅமைச்சர்வெளியுறவு அமைச்சர்அமெரிக்காபசிபிக்ஆசிய பசிபிக்சீனா