ஜோகனஸ்பர்க்: பொருளியலில் பின்தங்கிய நாடுகளில் மீண்டும் கடன் பிரச்சினை தலைதூக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுள்ளது.
அந்நாட்டின் தலைமையில் ஜி20 அமைப்பின் லட்சியங்களில் ஒன்றான ஏழை நாடுகளின் கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவது வெறும் எழுத்தாக மட்டுமில்லாமல் செயல்பாட்டுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) ஜி20 அமைப்பிற்கான தலைமைப் பொறுப்பை அமெரிக்காவிடம் தென்னாப்பிரிக்கா ஒப்படைத்தது.
இந்தோனீசியா, இந்தியா, பிரேசில் ஆகிய வளர்ந்துவரும் பொருளியலைக் கொண்ட நாடுகள் ஜி20 தலைமைப் பொறுப்புக்கான தங்கள் தவணையை நிறைவுசெய்துள்ளன.
வளர்ந்துவரும் பொருளியல்களின் கடன், சாதனை அளவாக 100 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகியுள்ளது.
கிட்டத்தட்ட, 20 ஆப்பிரிக்க நாடுகள் கடன் நெருக்கடியில் இருப்பதாக அனைத்துலகப் பண நிதியம் எச்சரித்துள்ளது.
“நாம் தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவற்றைக் கண்டறிவது மிகவும் முக்கியம்,” என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் நிதியமைச்சரும் அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசாவுக்கு ஆலோசனை வழங்கும் ஜி20 அமைப்பின் ஆப்பிரிக்க நிபுணர் குழுவின் தலைவருமான டிரேவர் மானுவேல் கூறினார்.
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் தென்னாப்பிரிக்கா இருந்தபோது நாடுகளின் கடன் சுமையைக் குறைக்கும் முயற்சிகளை மீண்டும் ஊக்குவிக்க முயன்றது. கொவிட் -19 கொள்ளை நோய் காலத்திற்குப் பிறகு முதன்முறையாக அமைப்பின் நிதி அமைச்சர்கள், கடன் நிலைத்தன்மை குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அந்நாடுகளின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அவர்கள் உறுதியளித்தனர்.

