வெனிசுவேலா நிலநடுக்கம்; நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

வெனிசுவேலா நிலநடுக்கம்; நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

படம்: ஏஎஃப்பி

26 Jun 2026 - 10:32 am

2 mins read

லா குவைரா: வெனிசுவேலா தலைநகர் கராக்கசையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கடுமையான நிலநடுக்கங்கள் உலுக்கியதை அடுத்து, ஏறத்தாழ 190 பேர் உயிரிழந்தனர்.

நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்ததோடு, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஜூன் 25ஆம் தேதி நிலவரப்படி, நூற்றுக்கணக்கான மக்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். மேலும், பலரது நிலை என்னவென்று தெரியவில்லை.

அமெரிக்க நிலவியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, ஜூன் 24ஆம் தேதி மாலை கராக்கசுக்கு மேற்கே 160 கிலோமீட்டர் தொலைவில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்குள்ளாகவே 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 1900ஆம் ஆண்டிற்குப் பிறகு அங்கு ஏற்பட்ட மிக வலுவான நிலநடுக்கமாகும்.

பல ஆண்டுகளாக நிலவிவரும் பொருளியல் நெருக்கடியால் வெனிசுவேலா ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள நிலையில் இந்தப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பெரும்பாலான உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், தலைநகரிலும் அதனைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளிலும் தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகள் மீட்புப் பணிகளைச் சிக்கலாக்கியுள்ளன.

ஜூன் 25ஆம் தேதி பிற்பகல் வெனிசுவேலாவின் தேசியச் சட்டமன்றத் தலைவரும், இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸின் சகோதரருமான ஜார்ஜ் ரோட்ரிக்ஸ், குறைந்தது 188 பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டதாகவும் 200 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் 1,520 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 250 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிந்துவிட்டன என்றும் அவர் கூறினார்.

கடுமையாகச் சேதமடைந்ததாகக் கூறப்படும் கட்டடங்களில் எட்டு மருத்துவமனைகள், வெனிசுவேலா செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம், பிரெஞ்சுத் தூதரகம் ஆகியவையும் அடங்கும். லா குவைரா மாநிலத்தில் கிட்டத்தட்ட 70,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ கபெல்லோ தெரிவித்தார்.

இதற்கிடையே, நிலநடுக்கத்தால் வெனிசுவேலாவின் அரசாங்கத்தைப் பலர் எதிர்க்கலாம் என்று முன்னைய ஒபாமா நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தார். இதனால், அரசியல் நிலையின்மை மேலும் மோசமடையலாம் என்றும் அவர் கூறினார்.

அனைத்துலக மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பை தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப் மூடியிருப்பதைச் சுட்டிய அந்த அதிகாரி, இதுவும் சவால்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
நிலநடுக்கம்கட்டடம்பொருளியல்உயிரிழப்பு