ஹனோய்: வெள்ளம், காற்று மாசு எனப் பல சவால்கள் இருந்தபோதிலும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதில் வியட்னாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
இந்த ஆண்டு முடிவதற்குள் கிட்டத்தட்ட 21 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளை வியட்னாம் வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 15ஆம் தேதி நிலவரப்படி வியட்னாம், இவ்வாண்டு 20 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளை ஈர்த்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் அது மேலும் 1 மில்லியன் பயணிகளை வரவேற்கக்கூடும்.
கொவிட்-19 காலகட்டத்திற்கு முன்னர் இருந்ததைவிட தற்போது வியட்னாம் சுற்றுலாத் துறையில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அதிகபட்சமாக 18 மில்லியன் பயணிகளை வியட்னாம் கையாண்டது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடாக வியட்னாம் மாறியுள்ளது. கடற்கரை, இயற்கை சூழ்ந்த நிலப்பரப்புகள், தொன்மையான வரலாறு, கலாசாரம் சார்ந்த இடங்கள் எனப் பல வித்தியாசமான அனுபவங்களை அது கொடுக்கிறது.
சீனாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வியட்னாம் வருகின்றனர். தென்கொரியா, தைவான், அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

