பேங்காக்: மியன்மாரை மிகப் பெரிய நிலநடுக்கம் சீரழித்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு முழுமையாக உதவ அங்கு நடக்கும் உள்நாட்டுப் போரில் உடனடி சண்டைநிறுத்தத்திற்குச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அறைகூவல் விடுத்துள்ளார்.
ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டிய அவசரக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) பேசிய டாக்டர் பாலகிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறினார். முன்னதாக, நிலநடுக்க பாதிப்பில் சிக்கித் தவிக்கும் மியன்மாருக்கு அனைத்துலக உதவி பெருகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. பல அண்டை நாடுகள் நிவாரணப் பொருள்கள், உதவிக் குழுக்கள் அடங்கிய போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி வைத்து வருகின்றன.
ரிக்டர் அளவில் 7.7 என பதிவான நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 1,700 பேர் மரணமடைந்துள்ளதாகவும், ஏறக்குறைய 3,400 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ராணுவ அரசாங்கம் கூறுகிறது. இந்நிலையில், அரசு ஊடகத்தில் நாட்டு மக்களுக்கு ராணுவ ஆட்சி மன்றத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹிலைங் ஆற்றிய உரையில்“அனைவருக்கும் சிறப்பான முறையில் மருத்துவ உதவி கிடைக்கும் வகையில், எல்லா ராணுவ, பொது மருத்துவமனைகள், பராமரிப்பு ஊழியர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு ஒருமுகத்துடன் பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க புவிமண்டல கணிப்பின்படி, இந்த நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரை இறந்திருக்கக்கூடும் என்றும் ஏற்பட்டுள்ள இழப்புகள் அந்நாட்டின் ஓராண்டு பொருளியல் உற்பத்தியை மிஞ்சிவிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் அண்டைய நாடான தாய்லாந்தையும் விட்டுவைக்கவில்லை. அங்கு கட்டுமானத்தில் இருந்த ஓரு வானுயர அடுக்குமாடிக் கட்டடம் தரைமட்டமானது.
அதன் இடிபாடுகளில் குறைந்தது 78 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இவற்றுடன், தலைநகர் பேங்காக்கில் 17 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மியன்மாரில் நிகழ்ந்த இந்த மிக மோசமான நிலநடுக்கம் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளான விமான நிலையம், விரைவுச்சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இதனால் மனிதநேய உதவி பாதிக்கப்பட்டதாக அது விளக்கியது. உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் மியன்மாரில் 2021ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதால் அங்கு அரசுக்கு எதிரான கிளர்ச்சி வெடித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் நாட்டில் முக்கியமான வேளாண் அடிப்படையிலான பொருளியலை கடுமையாக பாழ்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 3.5 மில்லியன் மக்கள் மருத்துவ பராமரிப்பு போன்ற அத்தியாவசிய சேவைக்கு வழியின்றி தவிப்பதாகக் கூறப்படுகிறது.

