அமெரிக்கத் துணையதிபர் ஜேடி வான்ஸ் தம் துணைவியார் உஷா வான்ஸுடன் கலந்துகொண்ட ராணுவப் பயிற்சி நிகழ்வில், பீரங்கிப் படைகளால் குண்டுகள் ஏவப்பட்டு, அவை வானில் வெடித்துச் சிதறின. அவற்றின் பாகங்கள் அருகில் இருந்த நெடுஞ்சாலையில் விழுந்ததாக அதிகாரிகள் திங்கட்கிழமை (அக்டோபர் 20) தெரிவித்தனர்.
ராணுவ வீரர்களின் சிறப்புப் பிரிவான மரீன் கார்ப் படையின் 250வது நிறைவைக் கொண்டாட ‘நீரிலிருந்து நிலம் வரை’ என்று பொருள்படக்கூடிய தலைப்பில் சனிக்கிழமை பிற்பகல் கலிஃபோர்னியாவின் பென்டல்டன் முகாமில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
படையின் தயார்நிலையையும் சேவையின் பாரம்பரியத்தையும் காட்டும் விதமாக மறைந்திருந்து அதிரடியாகத் தாக்குதல் பயிற்சி உண்மையான ஆயுதங்களையும் எறிபடைகளையும் பயன்படுத்தி நேரடியாக நடத்தப்பட்டது. அப்போது கனரக பீரங்கிப் படை ஏவிய ஒரு குண்டு வானில் வெடித்துச் சிதறி, முக்கிய நெடுஞ்சாலையில் அதன் பாகங்கள் விழுந்தன.
நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள் மீது அந்தப் பாகங்கள் மழைபோல் வந்திறங்கின. விபத்தில் யாருக்கும் காயமில்லை.
சென் டெய்கோ நகரிலிருந்து 60 கி.மீட்டர் வடக்கே நடந்த விபத்தை கலிபோர்னியா மாநில ஆளுநர் கெவின் நியுசம் வன்மையாகக் கண்டித்தார். அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ‘ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில்’ அதன் வன்மைத்தை காட்டியிருப்பதாக அவர் கூறினார்.
முன்னாள் ராணுவ வீரரான கலிஃபோர்னியாவின் நெடுஞ்சாலை பாதுகாப்புப் பிரிவின் தலைவர் டோனி கொரொனாடோ, மிகவும் கவனத்துக்குரிய வழக்கத்துக்கு மாறான நிகழ்வாக விபத்தை வர்ணித்தார். ஏனெனில் பயன்பாட்டில் உள்ள நெடுஞ்சாலையின் அருகே அருகே இவ்வாறான நேரடி ஆயுதப் பயிற்சிகளும் வெடிகுண்டுகளின் பயன்பாடும் நடத்தப்படுவதில்லை என்று அவர் விளக்கினார்.
நல்ல வேளையாக, ராணுவப் பயிற்சி நாளன்று, நெடுஞ்சாலைப் பிரிவினர் கிட்டத்தட்ட 17 கிலோமீட்டர் நீளமுள்ள அந்தச் சாலையைப் பொதுமக்கள் போக்குவரத்து பயன்பாட்டுக்குத் தடை செய்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட ராணுவ முகாம் விவரங்களை வெளியிடவில்லை. விபத்தின் விசாரணை ராணுவ அதிகாரிகளால் தொடரப்படுகிறது.


